புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன்! - மிரட்டும் புது பயங்கரம் | Chemical fish that causes cancer - Junior Vikatan | ஜூனியர் விகடன்

புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன்! - மிரட்டும் புது பயங்கரம்

கார்பைடு கல் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் டன் கணக்கில் அழிக்கப்பட்டன என்பது மாம்பழ சீஸனான கோடைக்காலத்தில் அன்றாடச் செய்தி. இதுபோல, ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று கடந்த சில நாள்களாக வெளியாகிவரும் செய்திகள் தமிழக மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளன. குழந்தைகளுக்கும் நம்பித் தருகிற ஆரோக்கிய அசைவ உணவான மீனில் ரசாயனமா?

‘இங்கே நல்ல மீன்கள் விற்கப்படும்’ என காமெடியில் வருவது போல யாரும் போர்டு வைப்பதில்லை. ‘‘நல்லா பாருங்க, புது மீனு...’’ என்று சொல்லி வாடிக்கையாளரிடம் மீனின் செவுளைத் திறந்து காண்பிப்பார் மீன் வியாபாரி. பார்த்தால் சிவப்பாக இருக்கும். அப்படி இருந்தால், அது நல்ல மீன் என்று நம்பி வாங்குவார்கள். செவுள் வெளிறியிருந்தால், மீன் கெட்டுவிட்டதாக அர்த்தம். தமிழக எல்லையில், கேரளாவில் டன் கணக்கில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யும் மீன்களின் செவுள்கள் சிவப்பாகவே உள்ளன. ஆனால், அவற்றைச் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்பதுதான் மிரட்டும் உண்மை.

கன்னியாகுமரி மாவட்ட எல்லையான அமரவிளை செக்போஸ்ட், நெல்லை மாவட்டம் வழியாகச் செல்லும் ஆரியங்காவு செக்போஸ்ட் போன்ற இடங்களில் இதுவரை 28 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. அவை, ரசாயனம் கலந்த மீன்கள். கேரளத்தில் இப்போது மீன்பிடித் தடைக்காலம் என்பதால் தமிழ்நாடு, கோவா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலிருந்து அங்கு மீன்கள் செல்கின்றன. மாதக்கணக்கில் மீன்களை இருப்புவைத்து அதிக லாபம் சம்பாதிப்பதற்காக, ‘ஃபார்மலின்’ என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி, அந்த மீன்களைக் கெட்டுப்போகாமல் வியாபாரிகள் பாதுகாக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்துவதற்கான ரசாயனம்தான், இந்த ஃபார்மலின். இப்படிப் பாதுகாக்கப்படும் மீன்கள் கேரளாவுக்குக் கொண்டுவரப்படுவதை அறிந்த கேரள அரசு, ‘ஆபரேஷன் சாகர் ராணி’ என்ற பெயரில் உணவுப்பாதுகாப்புத் துறையினரைக் களமிறக்கி விட்டுள்ளது. இந்தப் பிரச்னையால், மீன்களின் விலை சரிந்துவிட்டது என்றாலும், கேரளாவில் மீன் விற்பனை படுத்துவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick