மிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்!

திடீர் மழைக்குப் பிறகு வெயில் கொளுத்திய காலை நேரத்தில் கழுகார் சரேலென உள்ளே நுழைந்தார். ‘‘வருமானவரித் துறை ரெய்டின் அனல் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா என மூன்று மாநிலங்களில் பரவியிருக்கிறது’’ என்றார்.

‘‘விளக்கமாகச் சொல்லுங்கள்’’ என்றபடி ஜூஸ் டம்ளரை அவர் பக்கமாகத் தள்ளிவைத்தோம். 

‘‘தமிழகத்தில் கொங்கு மண்டலம், கர்நாடக மாநிலத்தில் முக்கியமான இடங்கள் என மொத்தம் 75 இடங்களில் ஜூலை 5-ம் தேதி காலையிலிருந்து ஐ.டி ரெய்டு நடந்தது. தமிழக அரசுக்கு சத்துணவு முட்டை, சத்துமாவு, பருப்பு, பாமாயில் என அனைத்தையும் விநியோகிக்கும் கிறிஸ்டி நிறுவனம், அதைச் சார்ந்த துணை நிறுவனங்களான நேச்சுரல் ஃபுட் புராடக்ட்ஸ், அக்னி பில்டர்ஸ், ராசி நியூட்ரி ஃபுட்ஸ் நிறுவனங்கள் சார்ந்த இடங்களிலேயே இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன.’’

‘‘யாருடையது இந்த நிறுவனம்?’’

‘‘கிறிஸ்டி நிறுவனம், குமாரசாமி கவுண்டர் என்பவருக்குச் சொந்தமானது. நாமக்கல் மாவட்டம், ஆண்டிபாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது. குமாரசாமி கவுண்டர் திருச்செங்கோடு அருகேயுள்ள மோர்பாளை யத்தைச் சேர்ந்தவர். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 1991-96 காலகட்டத்தில், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தார் இந்திரகுமாரி. அப்போது அவருடைய ஆசிகளுடன் கிறிஸ்டி நிறுவனத்தைத் தொடங்கினார், குமாரசாமி கவுண்டர். தொடக்கத்தில், ஊட்டச்சத்து மையங்களுக்கு சத்துமாவு வழங்கி வந்தது இந்த நிறுவனம். அதன் பிறகு, தமிழக அரசுடன் ஒப்பந்தங்கள் போட்டு, கோடிகளில் ‘டர்ன் ஓவர்’ செய்யத் தொடங்கியது. தற்போது, ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் அளவுக்கு சத்துமாவு, முட்டை, பருப்பு உள்ளிட்டவற்றை சப்ளை செய்து வருகின்றன இவரின் நிறுவனங்கள். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களுக்கு சுமார் 55 லட்சம் முட்டைகளை சப்ளை செய்யும் டெண்டரை கிறிஸ்டி நிறுவனம் எடுத்தது. இத்தனைக்கும் இவர்களிடம் கோழிப் பண்ணைகளே கிடையாது.’’ 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick