மிஸ்டர் கழுகு: களையெடுக்க காலா ரெடி!

ழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் செய்தி... ‘நேரில் வரமுடியாத அளவுக்கு பிஸி!’ இதைத்தொடர்ந்து பத்தி பத்தியாக வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்பித் தள்ளிவிட்டார்.

  ரஜினி அலுவலகத்தில் நடந்த சர்ச்சைகளைக் கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தேன். அது இன்னும் பெரிதாக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதுப்படத்தின் ஷூட்டிங் முடித்து, டார்ஜிலிங்கிலிருந்து சென்னை திரும்பிவிட்ட ‘காலா’ ரஜினி, இனி களையெடுப்பில் இறங்கப் போகிறாராம். சமீபத்தில், மன்றத்தின் முக்கியமான பொறுப்பில் அமர்த்தப்பட்ட ராஜு மகாலிங்கம்கூட டம்மி ஆக்கப்படலாம் என்கிறார்கள். ‘‘ராஜு மகாலிங்கம், தி.மு.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் மகனும் தி.மு.க எம்.எல்.ஏ-வுமான டி.ஆர்.பி.ராஜாவின் நெருங்கிய நண்பர். ஆரம்ப காலத்தில், டி.ஆர்.பாலு குடும்பத்தின் கப்பல் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்புகளைப் பார்த்தவர் ராஜு மகாலிங்கம். அது மட்டுமல்ல... மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடனும் நெருக்கமான பழக்கத்தில் இருக்கிறார். ரஜினி மன்றம் சார்பில் நடக்கும் வேலைகள் பற்றிய விவரங்கள் எல்லாம் தி.மு.க கூடாரத்துக்குப் போவதாக சில ஆதாரங்கள் ரஜினிக்குக் கிடைத்துள்ளன. அதனால்தான், ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள அலுவலகத்தை உடனடியாக மூடச்சொன்னார் ரஜினி. சீக்கிரமே ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து பரபரப்பான அறிவிப்புகள் வெளியாகும்’’ என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.

ஊழல் புகார்களின் எதிரொலியாக, ‘மன்றத்தின் தலைமை நிர்வாகிகள் யாரும் ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள மன்ற அலுவலகத்துக்குள் நுழையக் கூடாது’ என்று ரஜினி சொன்னதையடுத்து, யாரும் அங்கே வருவதில்லை. அதேபோல், யாரும் வெளியூர் டூர் போகவும் கூடாது என்று ரஜினி சொன்னதால், நிர்வாகிகள் சுற்றுப்பயணங்களை ரத்துசெய்துவிட்டனர். இதற்கு நடுவே, தனிக்காட்டு ராஜாவாக வெளியூர் டூர் போய்வருகிறார் டாக்டர் இளவரசன். ஏற்கெனவே, கடலூர் மாவட்ட மன்றப் பொறுப்பாளர், அமைப்புச் செயலாளர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் என ரஜினி மன்றத்தில் மூன்று பதவிகளை வைத்திருக்கும் டாக்டர் இளவரசனுக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்க ரஜினி முடிவெடுத்துள்ளாராம். ‘‘நம்மள நம்பித்தானே அரசியலுக்கு வந்தாரு ரஜினி. அவரை, நம்ம ஆளுங்க சிலரே ஏமாத்துறாங்க. இந்தத் துரோகிகளை சும்மாவிடமாட்டேன்’’ என்று சூளுரைத்தபடி டூரில் இருக்கிறாராம் டாக்டர் இளவரசன். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிர்வாகிகள் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick