பெருமிதத்தில் கரையும் துயரம்!

‘இது அதிசயமா, அறிவியலா என்று தெரியவில்லை. ஆனால், 12 சிறுவர்களும் குகையிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு விட்டார்கள்’ என தாய்லாந்து கடற்படை அறிவித்தபோது, உலகமே நிம்மதிப் பெருமூச்சு விட்டது. உலகக்கோப்பை கால்பந்து ஃபைனலுக்குப் போன அணிகளைவிட, தாய்லாந்து குகையில் சிக்கிய Wild Boars என்ற லோக்கல் அணியின் 12 சிறுவர்களும், அவர்களின் பயிற்சியாளரும் இன்று உலகப் பிரபலம் ஆகிவிட்டனர். சாகசத்துக்காக ஒரு குகைக்குள் நுழைந்து, திடீர் மழையில் பெருக்கெடுத்த வெள்ளம் வழியை மூடியதால் வெளியேற முடியாமல் தவித்து, குகைக்குள் நான்கு கிலோமீட்டர் தூரம் போய் மேடான இடத்தை அடைந்து, 17 நாள்களுக்குப் பிறகு இவர்கள் மீட்கப்பட்டார்கள்.

ஆறு நாடுகளிலிருந்து 1,000 நிபுணர்கள் திட்டமிட்டு, 140 ஆழ்கடல் நீச்சல் வீரர்களும் டாக்டர்களும் இணைந்து நடந்து, தவழ்ந்து, பாறைகளில் ஏறி, நீந்தி, ஒவ்வொரு மீட்பு நடவடிக்கையிலும் ஒன்பது மணி நேரம் பயணம் செய்து இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த ஒட்டுமொத்தச் சாதனையில் ஒரே ஒரு சோகம், 38 வயது சமன் குணன் மரணம். தாய்லாந்து கடற்படையின் ‘சீல்ஸ்’ என்ற ஆழ்கடல் தாக்குதல் பிரிவில் பணிபுரிந்தவர் சமன் குணன். வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பாங்காக் விமான நிலையத்தில் பணிபுரிந்துவந்த சமன், சிறுவர்கள் குகையில் சிக்கியதை அறிந்ததும் உதவி செய்ய விரைந்தார்.

ஜூலை 6-ம் தேதி குகைக்கு உள்ளே நீந்திச்சென்று, மூன்று ஆக்சிஜன் டேங்குகளைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டுத் திரும்பும்போது அந்தச் சோகம் நிகழ்ந்தது. ஆழமான தண்ணீரில் சமன் நீந்தி வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராது பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது. அவர் முதுகிலிருந்த சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்துவிட, மூச்சுத் திணறி உயிரிழந்தார் சமன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick