ஜி.எஸ்.டி-யால் திணறும் திருப்பூர்! - தெருவுக்கு வந்த தொழிலதிபர்கள்

‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற முழக்கத்துடன் 2017 ஜூலை முதல் தேதி அறிமுகம் செய்யப்பட்டது ஜி.எஸ்.டி. நாடாளுமன்றத்தை 2017 ஜூன் 30-ம் தேதி நள்ளிரவில் கூட்டி இந்தச் சட்டத்தை அறிமுகம் செய்தபோது பரவசமும் பெருமிதமும் அடைந்தது மத்திய அரசு. ‘‘பல்வேறு பெயர்களில் மத்திய, மாநில அரசுகள் விதித்திருந்த பல்வேறு வரிகளை ஒழித்துக்கட்டிவிட்டு ஒரே வரியை அமல் செய்ததால், பல பொருட்களின் விலை குறையும்’’ என்று அறிவித்தது மத்திய அரசு.

ஜி.எஸ்.டி அமலான ஓராண்டுக்குப் பிறகு ‘விலைவாசி பெருமளவு குறைந்திருக்கிறது. ஜி.எஸ்.டி வெற்றி பெற்றுள்ளது’ எனப் பெருமிதப்படுகிறது மத்திய அரசு. ஆனால், ‘உற்பத்தித் துறையை முடக்கிப்போட்டதுதான் ஜி.எஸ்.டி-யின் சாதனை. சிறிய தொழில் நிறுவனங்கள் பலவும் இதனால் மூடப்பட்டு விட்டன. தட்டுத்தடுமாறி இயங்குபவையும் எந்த லாபத்தையும் பார்க்கவில்லை. பெருநிறுவனங்கள் சமாளித்துக்கொண்டிருக்கின்றன’ என்பதுதான் தொழில்துறையின் கருத்தாக இருக்கிறது. இதற்கு எளிமையான உதாரணம், திருப்பூர்.

ஏற்றுமதிக்காக ஜவுளி தயாரிப்புகளை எடுத்துக்கொண்டு வாகன நெரிசலுக்கிடையே வண்டிகள் ஓடிக்கொண்டிருந்த திருப்பூர், இன்று காற்றாடிக்கொண்டிருக்கிறது. வெளியூர்களி லிருந்து வெறுங்கையுடன் பஸ்ஸில் வந்திறங்கிய பலரையும் லட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர் களாகவும் உயர்த்திய பெருமை திருப்பூருக்கு உண்டு. ஏற்றுமதியில் உச்சம் தொட்டு, ‘டாலர் சிட்டி’ என்று பெயர் வாங்கிப் பின்னலாடைத் துறையில் பல சாதனைகளைப் படைத்தது திருப்பூர். நீண்டகாலமாக உலகப்புகழ்பெற்று விளங்கிவந்த திருப்பூர் நகரத்தை, ஒரே ஆண்டில் முடக்கிப்போட்டுவிட்டது ‘ஜி.எஸ்.டி’ என்ற மூன்றெழுத்து மந்திரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick