மிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்!

‘‘வருமானவரித் துறையின் மொத்த கவனமும் தமிழ்நாட்டின்மீதுதான் இருக்கிறது’’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார் கழுகார். ரெய்டு செய்திகளை அவரே கொட்டட்டும் என்று காத்திருந்தோம்.

‘‘2016 சட்டமன்றத் தேர்தலின்போது கரூர் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய ரெய்டு சூறாவளி, இன்னும் தமிழகத்தைவிட்டு நகரவில்லை. அதன்பிறகு, சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு, ஈ.டி.ஏ குழும அலுவலகங்களில் ரெய்டு, தமிழகத்தின் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு, சசிகலா உறவினர்கள் வீடுகளில் ரெய்டு என்று சுழன்றடித்த வருமானவரித் துறையின் பார்வை, தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பக்கம் திரும்பியுள்ளது. கடந்த வாரம் அவருக்கு நெருக்கமான தொடர்புள்ள கிறிஸ்டி நிறுவனத்தில் ரெய்டு; இந்த வாரம் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் என இருவருக்கும் நெருக்கமான தொடர்பில் உள்ள எஸ்.பி.கே நிறுவனத்தில் ரெய்டு நடக்கிறது.’’

‘‘எஸ்.பி.கே நிறுவனம் யாருக்குச் சொந்தமானது?’’

‘‘அருப்புக்கோட்டையின் பெரும்புள்ளி செய்யாத்துரை என்பவருக்குச் சொந்தமானதுதான் எஸ்.பி.கே குழுமம். செய்யாத்துரையின் மகன் நாகராஜன் எல்லா அரசியல் புள்ளிகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். ரோடு கான்ட்ராக்ட் வேலைகள், ஸ்பின்னிங் மில் மற்றும் ஹோட்டல் தொழில்களை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. ஆரம்பத்தில் இந்த நிறுவனத்துடன் நெருக்கமாக இருந்தவர் ஓ.பி.எஸ். ஆனால், ரோடு கான்ட்ராக்ட் வேலைகளை எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டியதால், அந்தத் துறை அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியுடனும் இந்த நிறுவனம் நெருக்கமானது. தி.மு.க தரப்பில் கடந்த மாதம் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், முதல்வர் எடப்பாடி கைவசம் உள்ள நெடுஞ்சாலைத் துறையின் ஊழல்கள் பட்டியலிடப்பட்டன. அந்தப் பட்டியலில் எஸ்.பி.கே நிறுவனமும் உள்ளது. தி.மு.க கொடுத்த புகாரில், வண்டலூர்-வாலாஜாபாத் இடையிலான ஆறு வழி சாலை திட்டத்துக்கான டெண்டரை எஸ்.பி.கே அண்ட் கம்பெனி எக்ஸ்பிரஸ்வே நிறுவனத்துக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுதவிர ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மாநிலச் சாலைகள் அனைத்தையும் பராமரிப்பதற்கான ரூ.2,000 கோடி ஒப்பந்தமும் அதே எஸ்.பி.கே அண்ட் கம்பெனி எக்ஸ்பிரஸ்வே நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick