“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்?” - சீறிய எடப்பாடி

“ஜெயலலிதா வீட்டில் தங்கி இருந்தவர்களின் துணையுடன், கொல்லைப்புறமாக வந்தவர்தான் தினகரன். அவருக்கும் அ.தி.மு.க-வுக்கும் என்ன சம்பந்தம்? கட்சிக்காக நான் ஆறு முறை சிறை சென்றவன். தினகரன், கட்சிக்காகச் சிறை சென்றுள்ளாரா? வேறு ஏதும் பேட்டிகள் இல்லாத காரணத்தால், ஊடகத்தினர் எப்போதும் தினகரனின் பேட்டியைப் போடுகிறீர்கள். அவரை ஒரு பெரிய தலைவர் போலவும், நாட்டுக்கு பல திட்டங்களைக் கொண்டுவந்தவர்போலவும் காட்டுகிறீர்கள்” என்று மதுரை நிகழ்ச்சியில் மீடியாக்கள்மீது பாய்ந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா ஜூலை 15-ம் தேதி விருதுநகரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கிறார் என்று தெரிந்ததும், மதுரையில் தனித்தனியாக சில நிகழ்ச்சிகளுக்கு அவசர அவசரமாக ஏற்பாடு செய்தார்கள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமாரும் செல்லூர் ராஜுவும். மதுரை பாண்டி கோயில் திடலில் பிரமாண்டமான சைக்கிள் பேரணிக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்திருந்தார். அதைத் தொடங்கிவைத்துப் பேசியபோதுதான், தினகரனை கடுமையாக விமர்சித்தார் எடப்பாடி. “நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரப் பயணத்தை மதுரை மண்ணிலிருந்து தொடங்கிவிட்டோம். நாம் கேட்காமலேயே தற்போது தண்ணீர் கிடைக்கிறது. பெய்யும் மழையால் அணைகள் நிரம்பியுள்ளன. இதுவே நம் வெற்றிக்கு எடுத்துக்காட்டு. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நமக்கு வெற்றி கிடைக்க இயற்கையே உதவிசெய்கிறது’’ என்றார் எடப்பாடி உற்சாகத்துடன். அந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நாம் ஒன்றாக இணைந்து கழகத்தையும், ஆட்சியையும் தொண்டர்களின் வழிகாட்டுதலுடன் நடத்திவருகிறோம். நமக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick