கழுகார் பதில்கள்!

எஸ்.சந்திரன், பாலக்காடு.

‘நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு’ என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளாரே?


‘நீட் தேர்வு கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்க்க நல்ல மொழிபெயர்ப்பாளர்களை தமிழக அரசு தரவில்லை’ என்று தொடர்ந்து மத்திய அரசு சொல்லிவருகிறது. இதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல், தமிழக அரசு மௌனமாக இருக்கிறது. தமிழில் தேர்வு எழுதிய பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மாணவர்கள்தான் அதற்கான தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.மாதவன், கிருஷ்ணகிரி.

‘தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது’ என நீண்ட புகார்ப் பட்டியல் வாசித்த அ.தி.மு.க., கடைசியில் மத்திய அரசை ஆதரித்து வாக்களித்ததே?

‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன்’ என்று சொல்லிவிட்டபிறகு அழவா முடியும்?

இர.சத்யராஜ், ராஜேந்திரம். 

கிரானைட் கொள்ளை தொடர்பான சகாயம் ஐ.ஏ.எஸ் அறிக்கையின் தற்போதைய நிலை என்ன?


ஆட்சியாளர்கள்மீது நம்பிக்கை இல்லை என்பதற்காகத்தான், மேலூர் கிரானைட் குவாரிகளில் நடந்த மோசடிகளைக் கிளறி உண்மையைக் கண்டறிவதற்காக சகாயத்தை சென்னை உயர் நீதிமன்றமே நியமித்தது. ஆனால், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யாத தமிழக அரசு, அந்த விசாரணைக்கு எவ்வளவு நெருக்கடி கொடுக்க முடியுமோ, அவ்வளவும் கொடுத்தது. எல்லாவற்றையும் மீறி, தன் பணிகளைக் கிட்டத்தட்ட அவர் முடித்துவிட்டார். அதுதொடர்பான அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டார். பொதுவாக, அரசாங்கம் போடும் கமிஷன்களில்தான் தீர்வு கிடைக்காது. இப்போது, நீதிமன்றம் நியமித்த கமிஷனிலும் தீர்வு கிடைக்கவில்லை.

‘காய்ந்துபோன பூமியெல்லாம், வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காய்ந்துபோய்விட்டால், துன்பப்படுபவர்கள் எல்லாம் தங்கள் கவலையைத் தெய்வத்திடம் முறையிடுவார்கள். ஆனால், அந்தத் தெய்வமே கலங்கி நின்றால், அந்தத் தெய்வத்துக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும்?’ என்று சொல்வதைத் தவிர, வேறு எதுவும் தோன்றவில்லை.

எம்.கண்ணையன், அரியலூர்.

2,000 ரூபாய் கள்ளநோட்டு பிடிபட்டதாக அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. ஆனால், ‘கள்ளநோட்டே அச்சடிக்க முடியாத அளவுக்குப் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது புதிய 2,000 ரூபாய் நோட்டு’ என்றார்களே... அதெல்லாம் பொய்யா?


தினம் தினம் மாறிக்கொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தீவிரவாத அமைப்புகளும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சூழல் இருக்கும்போது, இதைத் தவிர்க்க முடியாது. காப்பானைவிட கள்ளன் பெரியவன்.

கே.கலைமணி, ஆர்.கன்னையன், ஈமெயில்

செம்பரம்பாக்கம் ஏரியை முழுமையாகத் தூர்வாரினாலே சென்னையின் தண்ணீர்த் தேவையை ஓரளவு சமாளிக்கலாம். ஏன் ஒரு கட்சியும் இதைப்பற்றிப் பெரிதாகப் பேசுவதில்லை?


செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், வீராணம் ஆகிய ஐந்து ஏரிகளை வைத்துக்கொண்டே ஓராண்டில் ஆறு அல்லது ஏழு மாதங்களுக்குத்தான் சென்னைக்கு முழுமையாகத் தண்ணீர் வழங்க முடிகிறது. செம்பரம்பாக்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு சென்னையின் குடிநீர்த் தேவையைச் சமாளிக்கமுடியாது. தூர்வாரிப் பராமரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், செம்பரம்பாக்கம் மட்டும் போதாது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருக்கும் ஏரிகளை ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றினாலே தண்ணீர்ப் பிரச்னை என்பது துளிகூட இருக்காது. ஆனால், ஆக்கிரமிப்பு செய்வதே அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கமும்தானே!

ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் சென்னை, நெற்குன்றம் ஏரியை ஆக்கிரமித்து அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிக்கொடுத்துள்ளனர். தற்போது, அதே ஏரிக்குள் நீதிபதிகளுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இப்போது சொல்லுங்கள்... இதைப் பற்றிப் பேசி என்ன பயன்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick