‘தேசபக்த’ மராட்டியர்களும் ‘தேசவிரோத’ தமிழர்களும்!

ப.திருமாவேலன்

த்தனை கோயில்களுக்குப் போனாலும், எவ்வளவு பரிகாரம் செய்தாலும் தூத்துக்குடி பாவத்தை எடப்பாடி பழனிசாமியால் துடைக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோருக்கும் தான் இது. மே 22-ம் நாள் தமிழ்நாட்டுக்குக் கண்ணீர் நாளாகவே இருந்து தொலையட்டும். ஆனால், உங்கள் வாழ்க்கையில் கறுப்புநாள். இந்தச் சாவுப்பூதம் இறுதிவரை உங்களை நிம்மதியாக இருக்க விடாது.

அப்பாவிகளைக் கொன்ற தீவிரவாதிகளை நீங்கள் கொல்லவில்லை. அப்பாவிகளையே கொன்றிருக்கிறீர்கள். ‘நாங்க நடந்து வரும்போது எந்த போலீஸ் கையிலயும் துப்பாக்கி இல்லை. சுடுவாங்கன்னு தெரியாது’ என வெள்ளந்தியாக வீறிடும் ஒரு பெண், இந்த அரசுமீது கள்ளங்கபடமின்றி வைத்த நம்பிக்கையைக் கொன்றிருக்கிறீர்கள். “அக்கா... வாங்கக்கா... சுடுறாங்க... ஓடிடுவோம்” என இன்பென்டாவிடம் (வயது 22) சொல்லி, அவரை இழுத்து ஓடுகிறாள் ஸ்நோலின் என்ற வெனிஸ்டா (வயது 17). இன்பென்டாவின் முதுகில் தடி இறங்குகிறது. ஸ்நோலின், குண்டு தாங்குகிறாள். பிளஸ் 2 தேர்வு எழுதியவள் ஸ்நோலின். “ஸ்டெர்லைட்டை மூடனும்னு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம்” என்கிறாள் இன்பென்டா. டிப்ளமோ முடித்துள்ள ரஞ்சித்குமார், ரத்த தானம் செய்வதில் ஆர்வமுள்ளவர். ‘சொட்டு ரத்தம் பத்தாது, மொத்த உடம்பையும் கொடு’ என்று அவரின் உயிரைப் பறித்துள்ளனர். ஈழத்தில் வாழ முடியாமல் வந்த கந்தையா, தென்னாட்டைக் காப்பாற்றும் மாவீரனாக மரணமடைந்துவிட்டார். தூத்துக்குடியில் முதல் குண்டு வாங்கியவர் அவர். ‘சாகுறதுக்கா இங்க வந்தோம்?’ என்று அவர் மனைவி செல்வமணியின் கேள்வி, கடலில் எதிரொலிக்கிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick