ஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்! | Arumugasamy Commission witnesses - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/06/2018)

ஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்!

ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் சந்தேகங்களை விசாரிப்பதற்கு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த ஆணையம் இப்போது ‘மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்தார்களா’ என்பதை  விசாரிக்கும் ஆணையமாக மாறியிருக்கிறது. ஜெயலலிதா வீடியோவை ஆணையம் பார்த்துவிட்டது; ஜெயலலிதா பேசிய ஆடியோவை ஆணையமே வெளியிட்டது; ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் ஆணையத்திடம் இருக்கிறது. ஆனால், ‘அமைச்சர்கள் ஜெயலலிதாவைப் பார்த்தார்களா, இல்லையா’ என்பதை ஆணையத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த விவகாரத்தில் அத்தனை பேரும் மாற்றி மாற்றிப் பேசுகின்றனர்.

உதாரணம் 1: 

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், 2018 ஏப்ரல் 7-ம் தேதி சாட்சியம் அளித்தார். ‘‘ஸ்ட்ரெச்சரில் முதல்வரை அழைத்துச் சென்றபோது, அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முதல்வரின் செயலாளர்கள் நான்கு பேர், முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், சசிகலா மற்றும் சில அமைச்சர்கள் அங்கு இருந்தனர். என் நினைவின்படி, அந்த அமைச்சர்கள் ஓ.பி.எஸ், விஜயபாஸ்கர் மற்றும் சிலர்’’ என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொரு இடத்தில், “நான் ஒரு கூட்டத்துக்காக டெல்லி போய் வந்தபிறகு, ‘முதல்வரை யாராவது பார்த்தார்களா’ என்று ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டேன். ‘அம்மா... அமைச்சர்களை வரவழைத்துச் சந்தித்தார்’ என்று பதில் கிடைத்தது’’ என ராம மோகன ராவ் சொன்னார்.

இந்தத் தகவல் வெளியானதும், ‘ராம மோகன ராவ் யாரையோ காப்பாற்றப் பொய் சொல்கிறார்’ என்று அமைச்சர் வேலுமணி பேட்டி கொடுத்தார். அமைச்சர் ஜெயக்குமார், ‘‘ராம மோகன ராவைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டும்’’ என்றார். அதன்பிறகு ஏப்ரல் 18-ம் தேதி மீண்டும் சாட்சியம் அளிக்கவந்த ராம மோகன ராவ், பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தார். ‘‘முதல்வரை அமைச்சர்கள் பார்த்ததாக நான் சாட்சியம் அளித்ததாக பத்திரிகை களில் செய்தி வெளியாகியுள்ளது. அது தவறு’’ என்று மாற்றிச் சொன்னார்.