கோயில் கடைகள்: மூடச் சொல்கிறது கோர்ட்; நடத்தச் சொல்கிறார் கமிஷனர்! | High Court order about temple shops - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/06/2018)

கோயில் கடைகள்: மூடச் சொல்கிறது கோர்ட்; நடத்தச் சொல்கிறார் கமிஷனர்!

ந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி கடைகள் அகற்றப்பட்ட நிலையில், ‘கடைகளைத் திறக்க வேண்டும்’ என இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெயா சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். ‘கோர்ட் உத்தரவை மதிப்பதா, அல்லது கமிஷனர் சொல்வதைக் கேட்பதா’ என்று புரியாமல் தவிக்கிறார்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிராகார மண்டபம் 2017 டிசம்பர் மாதம் இடிந்து விழுந்தது. அதனால் பெண் பக்தர் ஒருவர் மரணமடைந்தார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 2018 பிப்ரவரி 2-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவங்களால், கோயில்கள் மற்றும் கோயில் வளாகத்தை ஒட்டியுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களில் கடைகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில்தான், ஜூன் 15-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெயா ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். நீதிமன்ற உத்தரவுப்படி கடைகளை அகற்றுவதற்கான அந்தச் சுற்றறிக்கையில், ‘திருக்கோயில்களின் உட்புறம் மலர்கள், மாலைகள் மற்றும் வழிபாடு செய்வதற்குத் தேவைப்படும் பூஜைப்பொருள்கள், பிரசாதங்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர இதர வணிக நோக்கிலான கடைகள் வைக்கவோ, குத்தகை ஏலம் விடவோ அனுமதிக்கக்கூடாது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் அதிகாரிகளைக் குழப்பியுள்ளது.