‘நிலம்’ - உங்களுக்கு ரோடு... எங்களுக்கு வாழ்க்கை! | Chennai to Salem Green Corridor Express Highway - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/06/2018)

‘நிலம்’ - உங்களுக்கு ரோடு... எங்களுக்கு வாழ்க்கை!

“எங்கள் நிலத்தில் கால் வைக்காதே... எங்கள் நிலத்தை அபகரிக்காதே... செத்தாலும் இந்த மண்ணில் சாவோமே தவிர, இங்கிருந்து போக மாட்டோம்...” என்று எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கப்படவுள்ள சேலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளும் நில உரிமையாளர்களும் கதறும் கதறல், எட்டுத் திசைகளிலும் எதிரொலிக்கிறது.

சென்னை முதல் சேலம் வரை ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 277.3 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 159 கிராமங்கள் வழியாக இந்தச் சாலை செல்கிறது. இவற்றில் இதுவரை 80 கிராமங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தச் சாலையை எதிர்க்கும் 26 அமைப்புகள் இணைந்து ‘எட்டு வழிச் சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.

ஜல்லிக்கட்டு தொடங்கி ஸ்டெர்லைட் வரை எல்லாப் போராட்டங்களிலும் கிடைத்த அனுபவங்களை வைத்து இம்முறை அரசு உச்சபட்ச உஷார் நிலையில் இருக்கிறது. சின்னதாக எதிர்ப்பு கிளம்பினாலும், உடனே கைது நடவடிக்கை பாய்கிறது. அமைதியான வழியில் கூட்டம் நடத்தக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது. வெளியூர் நபர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நிலம் இல்லாதவர்களை, நில அளவீடு செய்யும் பணிகள் நடக்கும் இடத்துக்கு அருகேகூட வர விடுவதில்லை. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் கூட்டம் நடத்த ஏற்பாடுகளைச் செய்த நிர்வாகிகள், கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளர் விஜு கிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் சண்முகம், மாநிலத் துணைத் தலைவர் டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக நடிகர் மன்சூர்அலிகான், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷ், சமூகச் செயற்பாட்டாளர் வளர்மதி உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.