திவாகரன் Vs தினகரன் - மோதலுக்குத் தூபம் போட்ட இருவர்!

‘‘நான் இந்த அணியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்படுவேன். சென்னையில் தலைமை அலுவலகம் திறக்கப்படும். தனி செய்தித்தாள் ஒன்றும் ஆரம்பிக்கப்படும். மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் சீக்கிரமே நியமிக்கப் படுவார்கள். பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்படும். நம் பலத்தைக் காட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் முதல் மாநாடு சேலத்தில் பிரமாண்டமாக நடத்தப்படும்’’ என்று திவாகரன் அதிரடியாகப் பேசினார். உடன் இருந்தவர்கள், ‘‘ஏண்ணே இவ்வளவு வேகம்? கொஞ்சம் பொறுமையா, நிதானமா எல்லாத்தையும் செய்வோம்...’’ என்றனர். ‘‘நான் பொறுமையாதான் எதையும் செய்வேன். இனிமே நிதானமான வெற்றி நமக்குக் கிடைக்கும்’’ எனச் சொல்லிச் சிரித்தார் திவாகரன்.

திவாகரன் தனிக்கட்சி தொடங்குவது குறித்தும், திவாகரனுக்கும் தினகரனுக்குமான மோதல் குறித்தும் ஜூ.வி-யில் (29.4.18) எழுதியிருந்தோம். அதன்படி, ஏப்ரல் 29-ம் தேதி மன்னார்குடி மேல 3-ம் தெருவில் உள்ள தனக்குச் சொந்தமான வீட்டைப் புதுப்பித்து அம்மா அணி அலுவலகத்தைத் திறந்து வைத்தார் திவாகரன். பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் மெகா சைஸ் படத்துக்கு மலர்தூவி அவர் மரியாதை செய்தார். திவாகரனுக்கு நெருக்கமான ஜோதிடர்கள், ‘‘சித்திரை பெளர்ணமி அதிகாலையில் எதைத் தொடங்கினாலும் கண்டிப்பாக வெற்றிதான்’’ என்று சொல்ல, அவர் சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித் துள்ளார். தன் சுந்தரக்கோட்டை பண்ணை வீட்டில் மகன் ஜெயானந்துடன் சேர்ந்து அதிகாலை யில் சிறப்புப் பூஜைகள் செய்தபிறகு கிளம்பிய திவாகரன், மன்னார்குடி பந்தலடியில் உள்ள தன் இஷ்ட தெய்வமான ராஜகோபால சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகே அலுவலகத்தைத் திறந்து வைக்கச் சென்றார். தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஃபிளெக்ஸ்களில் ஜெயலலிதா, சசிகலா, தினகரன் படங்கள் இருக்கும். அம்மா அணியின் ஃபிளெக்ஸில் தினகரனுக்குப் பதிலாக திவாகரன் படம் இடம்பெற்றுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick