நான் ரம்யாவாக இருக்கிறேன் - 23

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தமிழ்மகன்

‘சென்னையில் தங்கியிருந்து எழும்பூர் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும்’ என்ற நிபந்தனையின் பேரில் ரம்யா, லக்ஷ்மிபிரியா இருவரையும் விடுவித்தனர். ‘சுதந்திரக் காற்றைச் சுவாசித்தல்’ என்பதன் அர்த்தம் ரம்யாவுக்கு எழுத்து எழுத்தாகப் புரிந்தது. வினோத் இரண்டு பேரின் குடும்பங்களையும் நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று காரம், மணத்துடன் விருந்துவைத்தான்.

‘‘அப்பாடி... ஒருவழியா பிரச்னை தீர்ந்தது’’ என்றாள் ரம்யா.

‘‘இல்லை... தீரவில்லை. கொலை செய்த பெண்ணைப் பிடிக்கிறவரை உங்களைக் கண்காணிச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்த மஜூம்தார் சொன்னதைக் கேட்டீங்கல்ல?’’ என நினைவுபடுத்தினான் ராமநாதன்.

‘‘ஏம்பா இப்ப புளியைக் கரைக்கிற? இரு... நிதானமா அதைப் பேசிக்கலாம்.’’ வினோத், சூழலைக் குளுமைப்படுத்த நினைத்தான். ‘‘ஒரே ஜீன் கொண்ட ரெண்டு பெண்களின் தலைமுடிகள்... ரெண்டுலயும் சில வித்தியாசங்கள். ‘அது, இரட்டையராக இருந்தால்தான் சாத்தியம்’ என்றாரே மஜூம்தார்? எல்லோரும் விட்டாலும் அவர் விட மாட்டார் போலிருக்குப்பா.’’

‘‘நீதிபதி சொல்வதுபோல ரோபோ பெண்ணோ, கிராஃபிக்ஸ் பெண்ணோ ஒருத்தி வந்தாளே! அவதான் கொலைகாரி. கவின் சொல்றது மாதிரி வேற்றுக்கிரகப் பெண் கதைதான் இப்ப டெம்பரவரியா நம்மைக் காப்பாத்தியிருக்கு.’’
வினோத் அவன் கையைப் பிடித்து, ‘‘அவங்களைக் கொஞ்சமாவது நிம்மதியா சாப்பிடவிடுப்பா’’ என்றான்.

‘‘மறுபடி அரெஸ்ட் பண்ணிடுவாங்களா?’’ என்றாள் லக்ஷ்மி, சுமாராக எதையோ புரிந்துகொண்டு.

வினோத் வேகமாகத் தலையசைத்து மறுத்தான். ‘‘பயப்படாதீங்க... அதைப்பத்தி ரெண்டு நாள் கழிச்சு பேசலாம்’’ என்றான்.

‘‘அதைப்பத்திப் பேசவே வேண்டாம்.’’

‘‘அப்புறம் எப்படி புரூவ் பண்றது?’’

‘‘அதை நான் பாத்துக்குறேன். நண்டு பொரியல் சாப்பிடுவீங்களா?’’ என்றான் ரம்யாவைப் பார்த்து.

‘‘நாக்கு செத்துப்போயிருக்கு. சொல்லுங்க. கேக்கும்போதே நாக்குல ஷாக் அடிக்குது’’ ரம்யா சந்தோஷமாகச் சிரித்தாள். ரம்யாவை வளர்த்தவர்களுக்குத் தங்களுக்குப் பிறந்து இறந்தது ஓர் ஆண் குழந்தை என்பது ஒரு தகவல் மட்டும்தான். அந்தக் குழந்தையை இழந்துவிட்ட சோகமோ, யாருக்கோ பிறந்த ரம்யாவைத்தான் நாம் இவ்வளவு நாள்களாக வளர்த்தோம் என்ற குழப்பமோ, அவர்கள் காட்டும் பாசத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதனால், ரம்யாவின் மனத்தில் இடைவெளி விழுந்து விடுமோ என்பதாக ஒரு தயக்க அச்சம் இருந்தது. ஆனால், எங்கே விலகி விடுவாளோ என யோசித்ததுகூட தேவையில்லாத அச்சமாக மாறியிருந்தது. அவர்களுக்கு அந்த அச்சம் தேவையில்லை என்பதை உணர்த்துவதற்காக ரம்யா இயல்புக்குமீறி இயல்பாக இருந்தாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்