‘மின்சாரம் இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கின்றன பிரதமரே!’ | Un-Electrified Villages still exist in Tamilnadu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

‘மின்சாரம் இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கின்றன பிரதமரே!’

துயரத்தில் தமிழக மலைக் கிராமங்கள்

ணிப்பூர் மாநிலத்தில் உள்ள மலைக் கிராமமான லெய்சாங் மின் வசதி பெற்றதையடுத்து, ‘இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி செய்யப்பட்டுவிட்டது’ என்று பெருமையுடன் அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும், ‘இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இது வரலாற்றுச் சாதனை நாள்’ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஒரு மலைக்கிராமத்துக்கு மின்வசதி கிடைத்தது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், ‘இந்தியாவிலேயே மின்வசதி இல்லாமல் இருந்த கடைசிக் கிராமம் இதுதான். இந்தக் கிராமத்துக்கு மின்வசதி அளித்துவிட்டதால், இந்தியாவில் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்வசதி வழங்கப்பட்டுவிட்டது’ என்று பிரதமர் சொல்வது உண்மையல்ல.

தமிழகத்திலேயே தர்மபுரி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் மின்வசதி இல்லாத மலைக்கிராமங்கள் இன்னும் உள்ளன. இந்தக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் துயரங்கள் குறித்த நேரடி ரிப்போர்ட் இது...

ஊரைவிட்டே வெளியேறிய மக்கள்!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் மறுகரையில் உள்ள மாறுகொட்டாய், ஆலம்பாடி ஆகிய கிராமங்கள், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே மின்வசதி கிடைக்கப் பெறாதவை. ‘பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி’ என்ற காரணத்தைச் சொல்லி, இங்கு வாழும் மக்களுக்கு மின்சார வசதியை ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் சின்னாறு அணையை அடுத்த பெரிய கள்ளிப்பட்டி மலைக்கிராமத்திலும், இன்றுவரை மின்சாரம் இல்லை. எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இந்தக் கிராமத்தில் இனி வாழ முடியாது என்ற விரக்தியில், பல குடும்பங்கள் இங்கிருந்து வெளியேறிவிட்டன. இப்போது 20 குடும்பங்களைச் சேர்ந்த வயதானவர்கள் மட்டுமே இங்கு உள்ளனர். இரவில் சிம்னி மற்றும் லாந்தர் விளக்குகளைப் பயன்படுத்தும் இவர்கள், காட்டு விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, கிராமத்துக்கு நடுவே தீ மூட்டிக் காவல் காப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Editor’s Pick