கர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி! | Karnataka Political status after Assembly Election Result - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/05/2018)

கர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி!

ஒன்று திரளும் கட்சிகள்!

ர்நாடக மாநிலத் தேர்தல் நிலவரங்கள் கர்நாடகாவை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையே அதிரடித் திருப்பங்களுக்கு உள்ளாக்கப்போகின்றன. பிரிந்து கிடந்த அகில இந்திய எதிர்க்கட்சிகளை இணைத்தது மட்டுமல்ல, ‘முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரலாமா?’ என்று யோசித்து வந்த நரேந்திர மோடியின் மனதைக் கர்நாடக நிலவரம் மாற்றிவிட்டதாகவும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் வெற்றியைத் தனது தன்மானப் பிரச்னையாக நரேந்திர மோடி நினைத்தார். எந்தவொரு பிரதமரும் ஒரு மாநிலத்தின் தேர்தலுக்கு இத்தனை நாள்கள் பிரசாரம் செய்ததில்லை என்று சொல்லும் அளவுக்குக் கர்நாடகாவில் இருந்தார் மோடி. மத்திய அமைச்சரவையே கர்நாடகாவில்தான் இருந்தது. எடியூரப்பா - சித்தராமையா ஆகிய இருவருக்கு இடையிலான தேர்தல் என்பது மாறி, நரேந்திரமோடி - சித்தராமையா ஆகிய இருவருக்கான தேர்தலாக இது மாறியது. காங்கிரஸின் வாக்குகளை தேவகவுடா உடைப்பார், பி.ஜே.பி வெல்லும் என்பதுதான் மோடி போட்ட கணக்கு. ஆனால், 38 இடங்களை வென்று, தனது ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைமையை தேவகவுடாவும் குமாரசாமியும் உருவாக்கினார்கள். ஆளும் கட்சியான காங்கிரஸுக்கு எதிரான வாக்குகள் அதிகமாக இருக்கும் என்றும் மோடி நினைத்தார்.