முடங்கியது சி.பி.ஐ! - நீதித்துறை மீது அதிருப்தியில் பி.ஜே.பி அரசு

நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான சி.பி.ஐ-யிலும் வெளிப்படையாக அரசியல் நுழைந்ததன் விளைவு... அதன் நேர்மையும் நாணயமும் அதலபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் சி.பி.ஐ அமைப்பை ‘கூண்டுக்கிளி’ என்று வர்ணித்த உச்ச நீதிமன்றம், இன்று மோடி ஆட்சியில் அதை 18 நாள்களுக்கு  முடக்கி வைத்திருக்கிறது. ‘‘55 ஆண்டு கால வரலாற்றில் இப்படி ஒரு மோசமான சூழ்நிலையை சி.பி.ஐ இதுவரை சந்தித்ததில்லை’’ என்கிறார்கள் அதன் முன்னாள் இயக்குநர்கள் பலரும். மோடி பிரதமரான பின்னர் பீகாரைச் சேர்ந்த அனில் சின்ஹா சி.பி.ஐ இயக்குநராக 2014 டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடியும் நேரத்தில், அப்போது சி.பி.ஐ கூடுதல் இயக்குநராக இருந்த ஆர்.கே.தத்தா அடுத்து பதவிக்கு வந்திருக்க வேண்டும். திடீரென அவர் உள்துறை அமைச்சகத்துக்குப் பணிமாற்றம் செய்யப் பட்டார். புதிய கூடுதல் இயக்குநராக குஜராத் மாநிலத்தில் பல ஆண்டு காலம் பணியாற்றி மோடிக்கு நெருக்கமாக இருந்த ராகேஷ் அஸ்தானாவை நியமித்தார்கள். அவரையே பின்னர் இயக்குநராகவும் நியமிக்க ஏதுவாக பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அடங்கிய தேர்வுக்குழுவுக்குப் பரிந்துரைக்கத் திட்டமிட்டனர். இந்தத் திட்டத்தைப் புரிந்துகொண்ட மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், அஸ்தானா மீதான புகார்களைப் பட்டியலிட்டு அவரது நியமனத்தை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் அஸ்தானாவை சி.பி.ஐ இயக்குநராக்கும் திட்டத்தை அரசு கைவிட்டது. டெல்லி போலீஸ் கமிஷனராக இருந்த அலோக் வர்மா 2017 ஜனவரி மாதம் சி.பி.ஐ இயக்குநர் பதவியில் நியமிக்கப்பட்டார்.அதன்பின் அலோக் வர்மா, அஸ்தானாமீது ஊழல் புகார் இருப்பது குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு (சி.வி.சி) தகவல் அளித்தார். அதனைக் கண்டுகொள்ளாத சி.வி.சி., அஸ்தானாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சி.பி.ஐ சிறப்பு இயக்குநராக நியமித்தது. வரும் ஜனவரியில் அலோக் வர்மா ஓய்வுபெற உள்ளார். அப்போது அஸ்தானாவை சி.பி.ஐ இயக்குநராக்கும் திரைமறைவு வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick