அக்குபங்சர் மருத்துவத்துக்கு அங்கீகாரம் இருக்கிறதா?

‘அக்குபங்சர் மருத்துவத்தைத் தமிழக அரசு  அங்கீகரிக்கவில்லை... பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் அக்குபங்சர் படிப்புகளுக்கும் அங்கீகாரம் இல்லை’ என்ற செய்தி வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் உலவத் தொடங்கியிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் முகம்மது கிஸார்,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்தச் செய்தி பரவுகிறது. இது அக்குபங்சர் மருத்துவம் பெறுபவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியிருக்கிறது. அதேநேரத்தில்  இந்தத் தகவல் பொய்... அக்குபங்சர் மருத்துவத்துக்கு அகில இந்திய அளவில் அங்கீகாரம் இருக்கிறது என்கிறார்கள் அக்குபங்சர் சிகிச்சையளிக்கும் ஹீலர்கள்.  உண்மையில் அக்குபங்சர் மருத்துவம் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா?

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பிய மருத்துவர் முஹம்மது கிஸாரிடம் பேசினோம். “அக்குபங்சர் மருத்துவர்கள் தமிழகத்தில் கிளினிக் நடத்துவது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சகத்திடம்  ஆர்.டி.ஐ மூலம் மூன்று விபரங்கள் கோரியிருந்தேன். எனக்கு அவர்கள் அளித்த பதிலில், ‘‘தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டயம், 0பட்டம், முதுநிலை அக்குபங்சர் படிப்புகள் இல்லை. அங்கீகாரம் இல்லாததால், தமிழகத்தில் சிகிச்சை அளிக்க அனுமதி இல்லை. அங்கீகாரம் இல்லாத படிப்பு அல்லது பயிற்சியை முடித்துச் சிகிச்சையளிக்கும் தெரபிஸ்ட்டுகள் மீது தமிழக அரசு சட்டம், அரசாணை எண். 171  (தேதி 27. 06.2016) சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை சட்டப்படி போலி மருத்துவர் கண்காணிப்புக் குழுவால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்ற பதில்  கிடைத்திருக்கிறது. நிலைமை இப்படியிருக்க, ‘மாற்று மருத்துவம்’ என்ற பெயரில் மக்கள் அக்குபங்சர்  மருத்துவமனைகளை நோக்கிச் செல்கிறார்கள். அக்குபங்சர் படித்தவர்களின் தவறான வழிகாட்டுதலால், முறையான ஆங்கில மருத்துவச் சிகிச்சையைத் தகுந்த நேரத்தில் எடுக்கத் தவறிவிடுகின்றனர். நோய் முற்றிய நிலையில் ஆங்கில மருத்துவத்துக்கு வந்தவர்கள் பலரையும் பார்த்திருக்கிறேன். மக்களிடம் இதுகுறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தவே இதை ஆர்.டி.ஐ மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். இதில் எனக்கு வேறு எந்தத் தனிப்பட்ட  நோக்கமுமில்லை” என்கிறார் முஹம்மது கிஸார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick