ராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை?

முன்னேறும் பி.ஜே.பி... பதுங்கிப்பாயும் பினராயி...

பரிமலை சன்னிதானத்தில் சரணகோஷ போராட்டத்தில் இரண்டாவது முறையாக தங்களது பிடியை மேலும் இறுக்கியிருக்கின்றன சங் பரிவார் அமைப்புகள். கோயிலுக்கு வந்த 52 வயது பெண்மீது தாக்குதல், ‘இளம் பெண்களைக் காவல் துறையினரே தடுப்பார்கள்’ என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் பேசியது என மொத்த சபரிமலையையும் ரணகளமாக்கிக் கொண்டிருக்கின்றன சங் பரிவார் அமைப்புகள். அதேசமயம், ஆரம்பத்தில் சங் பரிவார் அமைப்புகளைக் கடுமையாக ஒடுக்கிய பினராயி அரசின் காவல் துறை இந்த முறை அடக்கியே வாசித்தது. இதன் பின்னணியில் ராஜ்நாத் சிங் அலுவலகத்திலிருந்து வந்த அதிகாரபூர்வமற்ற உத்தரவைக் காரணம் காட்டுகிறார்கள் கேரள காவல் துறையினர்.

சபரிமலையில் சித்திரை ஆட்ட விசேஷ தினம் ஒன்று இருப்பது இந்த ஆண்டுதான் பெரும்பாலானோருக்கு தெரியவந்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இந்தத் திருநாளுக்கு பக்தர்கள் எண்ணிக்கை 1000 முதல் 1500 வரை இருப்பது வழக்கம். இந்த ஆண்டு பத்தாயிரத்தைத் தாண்டியது கூட்டம். இம்முறை இரண்டு நாள்களுக்கு முன்பே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிலக்கல் தொடங்கி சன்னிதானம் வரை மூவாயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டனர். துப்பாக்கி ஏந்திய கமாண்டோ வீரர்கள், தண்ணீர் பீரங்கி வாகனம், கண்காணிப்பு கேமராக்கள், பத்திரிகையாளர்களுக்குத் தடை, ஐயப்பனைத் தரிசிக்க அடையாள அட்டை,  இரண்டு மணி நேரத்திற்கு மேல் சன்னிதானத்தில் நிற்கக்கூடாது என ஏகத்துக்கும் கட்டுப்பாடுகள். ஆனால், இவை எல்லாம் அப்பாவி பக்தர்களுக்கு மட்டுமே. சங் பரிவார் அமைப்பினர் தாராளமாக விளையாடினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick