என்ன செய்தார் எம்.பி? - உதயகுமார் (திண்டுக்கல்)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பூட்டுத் தொழிலுக்கு பூட்டுப் போட்ட எம்.பி!

#EnnaSeitharMP
#MyMPsScore

வார்டு கவுன்சிலர் தேர்தலில் ஜெயிக்க முடியாதவர்கூட எம்.பி தேர்தலில் ஜெயிக்க முடியும் என்பதற்கு உதாரணம் உதயகுமார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சொந்த ஊரான நிலக்கோட்டையில் ஐந்தாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் உதயகுமார் போட்டியிட்டார். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனவருக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளில் அடித்தது டெல்லி ஜாக்பாட். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராக ஜெயலலிதாவால் உதயகுமார் அறிவிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். பேரூராட்சியில் நுழைய முடியாதவரை, நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்கள் திண்டுக்கல் வாக்காளர்கள். உதயகுமாரால் முன்னேற்றம் அடைந்ததா திண்டுக்கல்?  

நிலக்கோட்டையில் வழக்கறிஞர் தொழில் பார்த்துக்கொண்டிருந்தார் உதயகுமார். நாடாளுமன்ற வேட்பாளராக உதயகுமார் அறிவிக்கப்பட்டது அவருக்கே ஆச்சர்யம்தான். ஆரம்பத்தில் நத்தம் விசுவநாதனின் ஆதரவாளர் இவர். அதனால்தான், பிரதமரின் மாதிரி கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டத்தில் நிலக்கோட்டையைத் தவிர்த்துவிட்டு, நத்தம் விசுவநாதன் தொகுதியில் இருந்த ராகலாபுரம் கிராமத்தைத் தத்தெடுத்தார். நத்தம் விசுவநாதன் ஓரம்கட்டப்பட்டவுடன், காட்சிகள் மாறின. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அணிக்குத் தாவினார் உதயகுமார். முதலில் தினகரன் அணியில் இருந்தவர், பிறகு எடப்பாடி அணிக்கு இடம்பெயர்ந்தார்.

பூட்டுக்குப் பெயர்பெற்ற திண்டுக்கல், இப்போது பிரியாணியின் அடையாளமாக மாறியிருக்கிறது. நாடு முழுவதும் கிடைக்கக் கூடிய அனைத்து வகையான பயிர்கள், காய்கறிகள், பழங்கள் விளையும் ஆச்சர்யமான விவசாயப் பகுதியும்கூட. இங்கு, தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் பஞ்சு மில்களும் நிரம்பியுள்ளன. ஆன்மிகத்துக்கு பழனி. சுற்றுலாவுக்கு கொடைக்கானல். பல மாநில வியாபாரிகள் வருகைக்கும் பஞ்சமில்லை. ஆனாலும், திண்டுக்கல் பெரிதாக வளர்ச்சிப் பெறவில்லை. தங்கள் தொகுதியின் எம்.பி யார் என்பதே பலருக்கும் தெரியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick