RTI அம்பலம்: ஏழைக்கு எட்டாத தூரத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன்!

சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் சிறந்துவிளங்குவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனாலும், கிராமப்புற எளிய மக்களுக்கு அதன் பலன் முழுமையாகச் சென்று சேரவில்லை என்பதுதான் நிஜம்.

தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி இல்லை. இந்த அவலம் குறித்துச் சமூக செயல் பாட்டாளர் ஆனந்த்ராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் ‘அனைத்து மாவட்டத் தலைமை மருத்துவமனை களிலும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதியை அமைக்க வேண்டும்’ என்று 2017 ஜனவரியில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 20 மாதங்கள் ஆகின்றன... எப்படி இருக்கிறது நிலைமை? களமிறங்கியது விகடன் தகவலறியும் குழு.
 
தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக வருகிறார்கள். மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளில் மட்டும் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உள்நோயாளிகளாகச் சிகிச்சைப் பெறுகிறார்கள். இவர்களில் பத்து லட்சம் பேருக்காவது எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கவேண்டியுள்ளது. அரசுத் தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்கு 2,500 ரூபாயும், அதையே சற்றுத் தெளிவாகக் காட்டும் ‘கான்ட்ராஸ்ட்’ படம் எடுப்பதற்கு நான்காயிரம் ரூபாயும் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தினால் பணம் செலுத்த வேண்டியதில்லை.
தமிழகத்தில் 43 அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், 23 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், 250-க்கும் அதிகமான தாலுகா மருத்துவமனைகள் என 300-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ மனைகள் உள்ளன. இவற்றில் மொத்த மாகவே கடந்த ஆண்டு தொடக்கம் வரை 24 எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரங்கள் மட்டுமே இருந்தன. இதனால், ஏராளமான நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் சிகிச்சைக்கும் போக முடியவில்லை. எம்.ஆர்.ஐ வசதி இல்லாத மாவட்ட மருத்துவமனை களுக்கு வரும் நோயாளிகள், அருகில் இருக்கும் பெரிய ஊர்களுக்குத்தான் போகவேண்டியிருக்கிறது. கிருஷ்ணகிரியிலிருந்து சேலத்துக்கும், ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கும், கரூர் மற்றும் பெரம்பலூரிலிருந்து திருச்சிக்கும், கடலூரிலிருந்து புதுச்சேரிக்கும் போய்தான் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க வேண்டியிருக்கிறது. இங்கெல்லாம் தனியார் ஸ்கேன் மையங்கள் ஏழை களின் பணத்தில் கொழிக்கின்றன. இன்னொரு பக்கம், செயல்பாட்டில் இருக்கும் பல்வேறு மையங்களிலும் எம்.ஆர்.ஐ இயந்திரம் வேலை செய்யவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick