கழுகார் பதில்கள்! - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கழுகார் பதில்கள்! - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்!

@ஏமனோகரன், சென்னை.
ப‌ட்டாசு விஷயத்தில் காட்டப்பட்ட முனைப்பு, குடிகெடுக்கும் டாஸ்மாக் விஷயத்தில் காட்டப்படவில்லையே?


அரசாங்க அதிகாரிகள், நீதிபதிகள் என்று பலருக்குமான சம்பளம் தொடங்கிச் சலுகைகள் வரை டாஸ்மாக் வருமானம் கைகொடுக்கும்போது, அதைத் தடுக்க யாருக்கு மனது வரும்! மாற்று வருவாய் வழிகளை யோசிக்கக்கூட அரசுக்கு நேரம் இல்லை போலிருக்கிறது.

@இரா. கணேசன், பாலக்கோடு.
சமைப்பது, துணி துவைப்பது போன்றவை பெண்களின் வேலை என்பதுபோல திரும்பத் திரும்ப பதிவு செய்கின்றன விளம்பரங்கள். இதற்கெல்லாம் பெண்ணுரிமை இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லையே?

ஏன், பெண்கள்தான் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுமா?

@மோகன்தாஸ், பொம்மிடி.
அந்தக்கால ஹரிச்சந்திரன் போல, இந்தக் காலத்தில் உண்மையே பேசுவது சாத்தியமா?


முடியும்; ஆனால், முடியாது!

@பா.மல்லிகா, திருவண்ணாமலை.
‘சர்கார்’ கோமளவள்ளியின் நடிப்பு?


அந்தக் கேரக்டரின் பெயர்தான் குழப்பமாக இருக்கிறது!

@சபீர், திருப்பூர்.
‘கருணாநிதி இப்போது இருந்தால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியை எப்படி விமர்சித்திருப்பார்’ என்ற கேள்விக்கு, ‘அந்த பழநி சாமியின் தலைபோல ஆகிவிட்டதே தமிழ்நாடு’ என்று உங்கள் மனதில் உள்ளதைத்தானே பதிலாக வெளிப்படுத்தினீர்? 


கேரக்டராகவே மாறிவிடுவதுதான் நம் வழக்கம்.

@ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.
“ஜெயலலிதா இல்லாததால், நடிகர்களுக்குக் குளிர்விட்டுப்போய்விட்டது” என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்?

இவருக்கும்தான் குளிர்விட்டுப்போயிருக்கிறது. ஜெயலலிதா இருந்திருந்தால், அவரது அதிரடியான முகத்தைப் பற்றி இப்படி வெளிப்படையாக இவர் பேசியிருப்பாரா?

@பா.வினிதா, திருவண்ணாமலை.
சர்கார் படத்தை அ.தி.மு.க-வினர் பெரிய பிரச்னையாக ஆக்குகிறார்களே?


‘நோட்டா’ படத்தை இவர்கள் பார்க்கவில்லை. ‘சர்கார்’ சாம்பிள்தான். ஜெயலலிதா நோயில் வீழ்ந்தது தொடங்கி, நேற்றுவரை தமிழகத்தில் நடந்த அத்தனையையும் புட்டுப்புட்டு வைத்துக் கதறவிட்டிருந்தது நோட்டா. அந்தப் படத்தில் நடித்ததும் விஜய்தான். ஆனால், அவர் தெலுங்கு தேசத்து விஜய் (தேவரகொண்டா) என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்போல. இப்போதும் கெட்டுப்போய்விடவில்லை, உடனடியாக இவர்கள் அனைவரும் ‘நோட்டா’ படத்தைப் பார்த்துவிட்டு வந்து, ‘சர்கார்’ பற்றிப் பேசுவதற்கு ஏதாவது இருக்கிறதா என்று சொல்லட்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick