என்ன செய்தார் எம்.பி? - பன்னீர்செல்வம் (சேலம்)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
“எடப்பாடியின் பின்னால் ஒளிந்துகொள்கிறார்!”

#EnnaSeitharMP
#MyMPsScore

சுமார் 20 ஆண்டுகளுக்கு முந்தைய நிஜக்கதை இது. சேலம் மாவட்டம், பொன்னம்மாப்பேட்டை புத்துமாரியம்மன் கோயில் ஏரியா அது. அங்கு கேபிள் டி.வி கட்டணம் வசூலிக்க வீடு வீடாகச் சென்றார் ஒல்லியான ஓர் இளைஞர். பல வீடுகளில், ‘ஏம்ப்பா எத்தனை தடவை வாங்குவீங்க... இப்பதான் உங்க அண்ணன் வாங்கிட்டுப் போனாரு...” என்று சொன்னார்கள். பல வீடுகளில் இதையே சொல்ல, கடுப்பான அந்த இளைஞர் ஊர் நாட்டமையான தன் அப்பாவிடம் இதைப் புகாராகச் சொன்னார். அவரோ, “விடுடா கண்ணா, அவன் உன்கூடப் பொறந்த அண்ணன்தானே... அவனும் வக்கீலுக்குப் படிச்சிட்டு சும்மாதான் இருக்கான்...” என்று சமாதானப்படுத்தினார். அப்படி சும்மா இருந்த இளைஞர்தான், இன்று சேலம் நாடாளுமன்ற எம்.பி பன்னீர்செல்வம். சேலம் தொகுதியாக எம்.பி-யாக ரங்கராஜன் குமாரமங்கலம், வாழப்பாடி ராமமூர்த்தி, செல்வகணபதி, தங்கபாலு, செம்மலை எனப் பெரும் தலைகளே இருந்த வரலாற்றை மாற்றி, வார்டு கவுன்சிலராக இருந்தவர் எம்.பி பன்னீர்செல்வமாக உருவெடுத்தார். தொகுதிக்கு அவர் செய்தது என்ன?

“கட்சியில் செம்மலையை ஓரம்கட்டவே எடப்பாடி பழனிசாமியின் சிபாரிசால் பன்னீர்செல்வத்துக்கு சீட் கிடைத்தது. எடப்பாடி எள் என்றால், பன்னீர் செல்வம் எண்ணெய் ஊற்றித் தோசையே சுட்டுவிடுவார். ஆனால், சொல்லிக்கொள்ளும்படியாகத் தொகுதிக்கு எதுவும் அவர் செய்யவில்லை” என்று கொதிக்கிறார்கள் சேலம்வாசிகள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன், “கட்-அவுட்களிலும், சேலத்தில் எடப்பாடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும்தான் அவரைப் பார்க்கலாம். எட்டுவழி சாலையில் 20 கி.மீ இவரது தொகுதிக்குள் வருகிறது. நூற்றுக்கணக்கான விவசாயிகளின் நிலங்களும், ஆயிரக்கணக்கான தென்னை மரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. பாதிக்கப்பட்ட விவசாயிகளை அவர் சந்திக்கக்கூட இல்லை. சேலம் டவுன் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி, தஞ்சாவூருக்கு ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், கொண்டலாம்பட்டியில் ரயில் நிலையம் அமைத்து சேலம் - கரூர் பயணிகள் ரயிலை அங்கு நிறுத்திச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் எம்.பி கண்டுகொள்ளவில்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick