“உசுரோட இருக்கோமான்னு பார்க்கக்கூட யாரும் வரலை!”

தம் பிடித்த யானையாக டெல்டா மக்களின் வாழ்வாதாரங்களைக் குலைத்துப்போட்டிருக்கிறது கஜா. மக்களைக் காப்பாற்ற வேண்டிய ஆட்சியாளர்கள், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க அச்சப்பட்டு ஒதுங்கி நிற்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க ஹெலிகாப்டரில் பறந்துவந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாதி வழியில் திரும்பிவிட்டார். நிவாரணப் பணிகள் தேக்கமடைந்துள்ளன. “முகாம்களில் மூன்று வேளை உணவு என்பது, இரு வேளையாகக் குறைந்துவிட்டது; கெட்டுப்போன உணவைத் தருகிறார்கள்; மின்சாரப் பணிகளைக்கூட வீட்டுக்கு இருநூறு ரூபாய் கொடுத்து நாங்களே பார்த்துக்கொண்டோம். நிவாரண உதவிகள் உள்கிராமங்களைச் சென்றடையவில்லை” என்று குவிகின்றன துயரம் மிகுந்த புகார்கள்.

கஜா புயல் கரையைக் கடந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம் - வேதாரண்யம் வழியில் உள்ள நாலுவேதபதி, புஷ்பவனம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் பாதிப்புகள் மிக அதிகம். வேதாரண்யத்துக்கு எட்டு கி.மீ தொலைவில் உள்ளது ஆறுகாட்டுத்துறை மீனவக் கிராமம். முதன்முதலாக கஜா கரையைக் கடந்தது இங்குதான். ஏற்கெனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமம் இது. இந்தக் கிராமத்தில் மட்டும் 320 ஃபைபர் படகுகளும், 60 பெரிய விசைப் படகுகளும், 20 கட்டுமரங்களும் இருந்தன. இப்போது மொத்தமும் போய்விட்டது. ஆறுகாட்டுத்துறை பேரிடர் மீட்பு மையத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களே இதுவரை கிடைக்கவில்லை. அந்த ஊரின் தலைவர் ஜெயமணி, ‘‘கோடியக்கரை, கோடியக்காடு, மணியந்தீவு, ஆறுகாட்டுத்துறை, வானவன்மாதேவி இங்கெல்லாம் கடற்கரையை ஒட்டியிருக்கிற அறுநூறு வீடுகள் உருக்குலைஞ்சுப் போச்சு. சேத்தோட கடல் தண்ணீர் வீடுகளுக்குள்ளேயும் வந்துட்டு. நாலு மணி நேரம் ஓயாம அடிச்ச புயல்ல எங்க மொத்த வாழ்க்கையையும் தொலைச்சிட்டு நிக்கிறோம். மறுநாள் படகு கட்டிவச்ச இடத்துக்குப் போனா, பாதிப் படகு தூக்கிவீசிக் கெடக்கு. மிச்சப் படகுகளைக் காணோம். சில படகுங்க, இங்க இருந்து 40  கி.மீ-க்கு அந்தப் பக்கம் நாகப்பட்டினத்துல கிடந்துச்சு. அதுல இருந்த மோட்டார் எல்லாம் உடைச்சிடுச்சு. புயல் அடிச்சு ஆறு நாள் வரைக்கும், இங்க எந்த அதிகாரியும் வரலை. ஒத்த ஜெனரேட்ட வச்சுத்தான், ஊருக்கே சோறாக்கிப் போட்டோம். இப்போ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வந்து பாத்துட்டுப் போனார். அதுக்கு அப்புறம்தான் கொஞ்சம் காய்கறியும், ரெண்டு மூட்டை அரிசியும் வந்துச்சு.
சுனாமிக்கு முன்னாடி இருந்தே, 25 வருஷமா எங்க ஊருக்கு ‘தூண்டில் வளைவு’ அமைச்சிக் கொடுங்கன்னு கேக்குறோம். எந்த அரசும் செய்யலை. அடிக்கடி கடல் சீற்றம் வரும். பாதி மாசம், கடல் தண்ணி சேறா ஊருக்குள்ள வரும். தூண்டில் வளைவு இருந்திருந்தா, எங்க படகுகளை ஓரளவாச்சும் காப்பாத்தியிருக்கலாம். எங்களுக்கு அரிசி எதுவும் வேணாம். எங்க படகுகள் திரும்பக் கிடைக்க அரசு உதவணும்’’ என்கிறார் ஜெயமணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick