காவிரி டெல்டாவைக் காப்பாற்ற... சூரியசக்திக்கு மாறுவோம்!

டீசல் விலை உயர்வால் லாரி வாடகை 25 சதவிகிதம் வரை எகிறி, விலைவாசி உயர்ந்திருக்கிறது. ‘பெட்ரோல் விலை எகிறுகிறதே’ என்று புலம்பினால், ‘‘எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறுங்கள்’’ என ஆலோசனை தருகிறார்கள் ஆட்சியாளர்கள். தமிழக அனல்மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாகத் திடீரென உற்பத்தி பாதிக்கப்பட்டது. கூடங்குளத்திலிருந்து அணுசக்தி மின்சாரம் பல மாதங்களாகக் கிடைக்கவில்லை என தமிழக அரசு வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறது. இந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒற்றைத் தீர்வு, சூரியசக்தி மின்சாரம். ஒரு நல்ல செய்தி... இந்த விஷயத்தில் உலகின் முன்னணி நாடாக இந்தியா மாறியிருக்கிறது. 

‘நிலக்கரியைப் பயன்படுத்தி அனல்மின்சாரம் தயாரிப்பதும், அணு உலைகளை நிறுவி அணுமின்சாரம் தயாரிக்கப்படுவதும், இந்த பூமியைப் புதைகுழியில் தள்ளுவதற்குச் சமமான சுற்றுச்சூழல் சீர்கேடு’ என்று சூழலியலாளர்கள் குரல் கொடுக்கின்றனர். ‘ஏதோ ஒரு வழியில் மின்சாரம் கிடைத்தால் போதும்’ என்ற நிலையிலிருந்து, ‘பூமியை பாதிக்காமல் மின்சாரம் எடுக்க வேண்டும்’ என்ற நிலைக்கு இப்போது உலகம் மாறியிருக்கிறது. எனவே, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் களமிறங்கியிருக்கின்றன.

சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (IRENA-International Renewable Energy Agency) ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ‘2017-ம் ஆண்டில் குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் இந்தியா முதல் இடத்தை நோக்கி முன்னேறி இருக்கிறது’ என இந்த ஆய்வறிக்கை சொல்கிறது. சூரியசக்தி மின்சாரத்துக்கான சூரிய மின் தகடுகள், உலகிலேயே சீனாவில்தான் அதிகம் தயாரிக்கப்பட்டன. ஆனால், சீனாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, சூரிய ஒளி உள்ளிட்ட புதுப்பிக்கத்தகுந்த ஆற்றல்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா முன்னணிக்கு வந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick