மிஸ்டர் கழுகு: வழக்கு... ரெய்டு... கைது!- எடப்பாடியின் திருப்பதி பிளான்

‘‘ஆதார் இன்றி ஓர் அணுவும் அசையாது போலிருக்கிறது’’ என்றபடி உள்ளே நுழைந்த கழுகாரிடம், ‘‘ஆதார் கதை இருக்கட்டும்... ‘ஆதாரங்களுடன் தி.மு.க ஊழலை அம்பலப்படுத்துவேன்’ என்று சபதம் போட்டுள்ளாரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதைப்பற்றிச் சொல்லுங்கள்’’ என்றோம்.

‘‘அடுத்தடுத்து நிகழப்போகும் அதிரடி நிகழ்வுகளுக்கான துவக்கமே முதல்வரின் பேச்சு என்று குஷிபொங்கச் சொல்கின்றனர் அ.தி.மு.க தரப்பினர். தலைவர் பொறுப்புக்கு வரும்வரை அத்தனை ஆக்ரோஷமாக அ.தி.மு.க தரப்பின் மீது போர் தொடுக்காத மு.க.ஸ்டாலின், தலைவரானது முதல் பெரும் தலைவலியாகவே மாறிவிட்டார். அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார். நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு, நிலக்கரி முறைகேடு, உள்ளாட்சித் துறை டெண்டர் முறைகேடு, குட்கா வழக்கு என அவர் தினமும் வெளியிடும் அறிக்கைகள், அ.தி.மு.க அரசை ஆடிப்போக வைத்துள்ளன. இந்தக் கோபத்தில்தான், செப்டம்பர் 25-ம் தேதி சேலத்தில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உறுமினார். இதன்மூலமாக, அ.தி.மு.க-வும், பி.ஜே.பி-யும் மீண்டும் நெருங்க ஆரம்பித்துள்ளன.’’

‘‘கேட்கவே தலைசுற்றுகிறதே?’’

‘‘சமீபகாலமாகவே, அ.தி.மு.க மீது மத்தியில் ஆளும் பி.ஜே.பி கெடுபிடிகளைக் காட்டிக்கொண்டிருந்தது. அதற்கு ஏற்றபடி, அந்த ஆட்சிமீது ஊழல் புகார்களும் வரிசை கட்டின. அதனால், கூட்டணியை மாற்றி அமைக்கலாம் என்று தி.மு.க பக்கம் கொஞ்சம் கரிசனம் காட்ட ஆரம்பித்தது பி.ஜே.பி. தமிழகத்தில் இருக்கும் சில தலைகள் தடுத்தாலும், தமிழக ராஜகுரு அணை போட்டாலும், தி.மு.க பாசம் சமீபநாட்களாக டெல்லி பி.ஜே.பி-க்கு பெருக்கெடுத்து ஓடியது. இதன் தொடர்ச்சியாக ரெய்டுகள் அணிவகுக்க, பி.ஜே.பி மீது கோபத்தைக் காட்ட ஆரம்பித்தது அ.தி.மு.க.’’

Editor’s Pick