தமிழகத்தில்... 3,400 அரசுப் பள்ளிகள் மூடப்படும்? - நிதியை நிறுத்திய மத்திய அரசு

ரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவருகிறது. என்றாலும், ‘அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும்’ என்பதற்கான விழிப்பு உணர்வு இப்போது பலரிடம் அதிகரித்துவருகிறது. முன்மாதிரியாகத் திகழும் சில அரசுப் பள்ளிகளும், சில அரசுப் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுமே இதற்குக் காரணம். ‘‘இந்தச் சூழலை ஊக்குவித்து, அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. ஆனால், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் காரணம் காட்டி, தமிழகத்தில் சுமார் 3,400 பள்ளிகளை மூடத் திட்டமிட்டு வருகின்றன அரசுகள்’’ என்று குமுறுகிறார்கள் கல்வி உரிமைச் செயற்பாட்டாளர்கள்.

கல்விக்குப் பணம் தடையாக இருக்கக்கூடாது என்ற அக்கறையோடு மக்களிடம் கையேந்தி அரசுப் பள்ளிகளைத் தொடங்கினார் காமராஜர். அடுத்தடுத்து வந்த அரசுகளும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தின. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக கல்வி பெருமளவில் தனியார்மயமாகி, அரசுப் பள்ளிகள் கைவிடப்பட்டன. போதுமான ஆசிரியர்களை நியமிக்காமல், பாடத் திட்டங்களை மேம்படுத்தாமல், உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்யாமல், மக்கள் மத்தியில் அரசுப் பள்ளிகள்மீது அவநம்பிக்கை ஏற்படச் செய்தார்கள். விளைவு... பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியாக இருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் 40 லட்சமாகக் குறைந்துவிட்டது. போதாக்குறைக்கு தற்போதைய மத்திய பி.ஜே.பி அரசின் கொள்கைகளும் அரசுப் பள்ளிகளுக்கு எதிராகவே இருக்கின்றன. மத்திய திட்டக் குழுவைக் கலைத்துவிட்டுக் கொண்டுவரப்பட்ட ‘நிதி ஆயோக்’ அமைப்பு, ‘மூன்றாண்டு உடனடி செயல்திட்டம்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இது, ‘மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்; அல்லது அருகிலிருக்கும் அரசுப் பள்ளியோடு இணைக்க வேண்டும்’ என்கிறது. அதன்படி 3.7 லட்சம் அரசுப் பள்ளிகளில் 15 பேருக்கும் குறைவாக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை மூடிவிடலாம் என்று அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது அந்த அமைப்பு. தமிழகத்தில் 37,211 அரசுப் பள்ளிகளும் 8,400-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்படுகின்றன. இவற்றில் சுமார் 3,400 பள்ளிகளில் 15-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கிறார்கள். இவற்றுக்குத்தான் இப்போது ஆபத்து வந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick