மிஸ்டர் கழுகு: சபாநாயகருக்கு செக்! - கருணாஸ் காட்டிய ஆட்டம்

ல்லா சேனல்களிலும் மழை குறித்த ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை வரிகள் ஓடிக்கொண்டிருக்க, ரெயின் கோட்டில் என்ட்ரி கொடுத்தார் கழுகார். ‘‘கவலைப்படாதீர். மாநிலம் முழுக்க ரெட் அலெர்ட் கொடுத்தாலும், அதனால் எல்லா இடங்களிலும் கனமழை என அர்த்தமல்ல. ஒரே நாளில் 200 மி.மீ-க்கு மேல் மழை பெய்யும் வாய்ப்புள்ள மலைப் பிரதேசங்களில் கவனமாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ரெட் அலெர்ட் தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தபோது, ரெட் அலெர்ட் கொடுத்திருந்தார்கள்’’ என விவரித்த கழுகார், அரசியல் அலெர்ட்களை அடுக்க ஆரம்பித்தார்.

‘‘கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக இருந்த கருணாஸ், இப்போது ‘ஹார்ட் அட்டாக்’ டாப்பிக்காக மாறிவிட்டார். ‘முதலமைச்சரே என்னைக் கண்டு பயப்படுகிறார்’ என்று கர்ஜித்தவர், பின்பு அதற்கு வருத்தம் தெரிவித்தாலும் முதல்வரின் கோபம் தணியவில்லை. வேலூர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்ததும், நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் கார் கண்ணாடியை உடைத்த பழைய வழக்கை தூசு தட்டினார்கள். மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தார் கருணாஸ். அதேநேரத்தில் நெல்லை போலீஸ் படை சென்னைக்குக் கிளம்பியது. அக்டோபர் 3-ம் தேதி காலை தன் வீட்டுக்கு போலீஸ் வருவதை வடபழனியைச் சேர்ந்த உயர் காவல்துறை அதிகாரி மூலம் அறிந்த கருணாஸ், உடனே மருத்துவமனையில் அட்மிட்டாகிவிட்டார்.’’

‘‘ரொம்பவே உஷார்தான்.’’

“ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமீமுன் அன்சாரி, தனியரசுவுடன் இணைந்து கருணாஸ் செயல்பட்டு வந்தார்; தினகரன் தரப்புடனும் நெருக்கம் காட்டினார். அது ஆளும்தரப்புக்குப் பிடிக்கவில்லை. இதற்கிடையே, ‘திருவாடானை தொகுதியில் எந்த அரசுப் பணிகளும் நடக்கவில்லை. அதற்குக் காரணம் அமைச்சர் மணிகண்டன்தான்’ என்று கருணாஸ் வெளிப்படையாகவே சொன்னார். அதுகுறித்து முதல்வரிடம் ஏற்கெனவே புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்ற வருத்தமும் கருணாஸுக்கு இருந்தது. அந்தக் கோபத்தில்தான் தி.மு.க நடத்திய போட்டி சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இப்போது ‘கூவத்தூர் ரகசியத்தை வெளியிடுவேன்’ என்கிறார். கூவத்தூரில் தங்கியிருந்தபோது எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் கருணாஸ் வசம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick