மினி மீல்ஸ்

தம்பியை விமர்சித்தார்... அண்ணனைத் திட்டினார்!

பு
துச்சேரியில் அரசு நிகழ்ச்சி மேடையில் கவர்னர் கிரண் பேடியும், அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகனும் நேருக்கு நேர் மோதிய காட்சி, சமூக வலைதளங்களில் வைரலானது. ‘தூய்மை இந்தியா’ திட்டம் தொடர்பான அந்த நிகழ்ச்சியில், முதலில் கவர்னர் கிரண் பேடியைப் பாராட்டியபடிதான் பேச்சைத் தொடங்கினார் அன்பழகன். அதன்பின், “என் தொகுதியிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் கொடுத்தும், நிதி கொடுக்காததால் திறந்தவெளியைத்தான் கழிப்பிடமாகப் பயன்படுத்துகிறார்கள்” என அரசை விமர்சித்துப் பேசினார். இந்தப் பேச்சுக்குப் பிறகே, ‘பேச்சை முடிக்குமாறு‘ துண்டுச் சீட்டுகள் தூது போயின. அதுவும் தோல்வி அடையவே “You Go... You Go...” என்று மாறி மாறி கத்தித் தீர்த்தார்கள். ஏன் இந்த மோதல்? “கவர்னர் கிரண் பேடியின் ஆதரவு அதிகாரி ஒருவர்மீது அன்பழகனின் தம்பி பாஸ்கரன் எம்.எல்.ஏ கொண்டுவந்த உரிமை மீறல் பிரச்சனைதான் அமைச்சரவைக்கும், கவர்னர் மாளிகைக்குமான உரசலை அதிகப்படுத்தியது. அதன்பிறகு, ‘குண்டர்களுடன் சென்று அதிகாரிகளை மிரட்டினார்’ என்று வெளிப்படையாகவே பாஸ்கரன் எம்.எல்.ஏ-வை கிரண் பேடி விமர்சித்தார். இந்த உரசலின் உச்சகட்டம்தான், அன்றைய தினம் மேடையில் அரங்கேறியது” என்கிறார்கள் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில்!

ஆறுதல் சொல்ல அழகிரி வருவார்!

கா
ஞ்சிபுரம் தி.மு.க பிரமுகரான புகழேந்தி, கட்சி நிகழ்ச்சி எதுவானாலும் சைக்கிளிலேயே வலம்வந்து அழைப்பிதழ் கொடுப்பார். தி.மு.க-வின் தீவிர விசுவாசியான இவர், சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். 2001-ல் புகழேந்தியின் மூன்று குழந்தைகளும் ஏரியில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி இறந்துவிட்டனர். அப்போது கட்சியிடம் உதவி கோரி மனு அளித்தார் புகழேந்தி. ஆனால், உதவி கிடைக்கவில்லை. 2009-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு விழாவில் அழகிரியை சந்தித்து அவரிடமும் மனு கொடுத்தார் புகழேந்தி. உடனடியாக ஐந்து லட்ச ரூபாய் நிதி கிடைக்க ஏற்பாடு செய்தார் அழகிரி.

அதை சற்றும் எதிர்பார்க்காத புகழேந்தி, காஞ்சிப் பட்டு வாங்கிக்கொண்டு மதுரைக்குச் சென்று அழகிரிக்கு நன்றி தெரிவித்தார். செப்டம்பர் 27-ம் தேதி புகழேந்தி இறந்ததைத் தொடர்ந்து, அவரின் குடும்பத்தினரை அழகிரியின் ஆதரவாளர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். ‘இன்னும் சில தினங்களில் புகழேந்தி இல்லத்துக்கு அழகிரி செல்வார்’ என்று கூறும் அழகிரியின் ஆதரவாளர்கள், காஞ்சியில் அழகிரிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கத் தயாராகிவருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick