என்ன செய்தார் எம்.பி? - பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
முட்டைக்கும் பெப்பே... லாரிக்கும் பெப்பே!

#EnnaSeitharMP
#MyMPsScore

1996 - 2001 தி.மு.க ஆட்சிக் காலம். அ.தி.மு.க சார்பில் ஜெயித்து சட்டமன்றத்துக்கு வந்த நான்கே நான்கு எம்.எல்.ஏ-க்களில் அவரும் ஒருவர். சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்வரிசையில் இருந்த அ.தி.மு.க உறுப்பினர் ஒருவர், ‘‘கறுப்பு மையால் வெள்ளைப் பக்கத்தை நிரப்பியிருக்கும் இந்த பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை’’ என்று சொல்லி, காலடியில் இருந்த குப்பைத் தொட்டியை எடுத்து, பட்ஜெட்டை புத்தகத்தைக் கிழித்து அதில் போட்டார். எதிரில் இருந்த முதல்வர் கருணாநிதி எழுந்து, ‘‘இந்த நிதிநிலை அறிக்கையில் ‘அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்’ பற்றிக் குறிப்பிட்டிருக்கிறோம். அண்ணாவின் பெயர் தாங்கிய கட்சியின் உறுப்பினர் அண்ணாவுக்குக் கொடுத்த மரியாதை இதுதான். பட்ஜெட்டின் ஆரம்பத்தில் திருக்குறள் எழுதப்பட்டிருக்கிறது. அந்தத் திருவள்ளுவர் பெயரைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டியிருக்கிறார். ‘சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி’யை உயர்த்தியது பற்றி பட்ஜெட்டில் தெரிவித்திருக்கிறோம். கடைசியில் உறுப்பினர் தன்னையே குப்பைத் தொட்டியில் போட்டிருக்கிறார்’’ என விளாசியபோது பதிலடி கொடுக்க முடியாமல் திணறிப் போனார் அந்த உறுப்பினர். அவர்தான் பி.ஆர்.சுந்தரம். அப்போது ராசிபுரம் எம்.எல்.ஏ-வாக சட்டசபைக்குப் போனவர், இப்போது நாமக்கல் எம்.பி-யாக நாடாளுமன்றத்துக்குப் போயிருக்கிறார். அவர்தான் இந்த வார என்ன செய்தார் எம்.பி?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் பி.ஆர்.சுந்தரம்தான் ஜெயிப்பார் என முன்னணி பத்திரிகைகள் எழுதின. அந்தப் பத்திரிகைகளையே தனது தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்ட சாமர்த்தியசாலி சுந்தரம். ஜெயித்து எம்.பி ஆன பிறகு சுந்தரம் செய்தது என்ன? தொகுதியை ரவுண்ட் அடித்தோம்.

‘‘இந்தியாவுக்கே அறிமுகமான ஏரியா, நாமக்கல். தென் இந்தியாவின் முட்டை கேந்திரம் மற்றும் இறைச்சிக்கோழி உற்பத்தி மையம், லாரிகள் வாணிபத்தில் முதலிடம், இந்தியா முழுக்கப் போர்வெல் போடும் வாகனங்களை அனுப்பிவைக்கும் தொழில் நகரம் என இந்தியாவின் பொருளாதாரத்தில் நாமக்கல் மாவட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எண்ணற்ற தேவைகள் இந்தத் தொகுதிக்கு இருக்கும் நிலையில், சுந்தரம் தொகுதிக்கு எப்போதாவது வருவார்; போவார். உயர் கோபுர விளக்குகள் அமைப்பதில் ஆர்வம் காட்டுவார். அரசு நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலைகாட்டுவார். அவ்வளவுதான் அவருடைய தொகுதிப்பணி’’ என நக்கலடிக்கிறார்கள் தொகுதிவாசிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick