கழுகார் பதில்கள்! - போராளிகளைக் கண்டு பயம் ஏன்?

எஸ்.ரவி, மயிலாடுதுறை.

தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள ஜம்மு காஷ்மீரில்கூட உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கவில்லையே?


அங்கு கவர்னர் ஆட்சி நடப்பதால், உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடிகிறது. இங்கு நீதிமன்றத்தையே மதிக்காத ஆட்சி நடப்பதால், தேர்தல் நடக்காமல் இருக்கிறது.

@பி.ரஹீம், மதுரை-18.


எப்பவும் ‘அவர்’தானே பட புரமோஷனுக்காக அரசியல் பேசுவார்?

‘இவரும்’ பிசினஸ் பண்ண வேணாமா தலைவா?

@செ.ரவிச்சந்திரன், நாகை.

கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றதுபோல, ஏன் ஜெயலலிதாவுக்கு நடைபெறவில்லை?


தி.மு.க-வில் அடுத்த தலை யார் என்பது ஏற்கெனவே தெளிவாகிவிட்டதால், அடுத்தடுத்தக் கட்டங்களுக்கான வேலைகள் திட்டமிட்டு அரங்கேற்றப் படுகின்றன. இங்கே, அடுத்த வால் யார் என்பதுகூட முடிவாகவில்லை. கூடவே சொத்து, வம்பு, வழக்கு, உள்குத்து, கால்வாருதல் போன்றவற்றுக்கே நேரம் இல்லாமல் தவிக்கும்போது, இதைப் பற்றியெல்லாம் யார் கவனம் செலுத்துவது?

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்கிற சூழலில், கர்நாடகாவில் மூன்று எம்.பி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இது கிரிமினல் வேஸ்ட் அல்லவா?


இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலான ஆயுள் கொண்டிருக்கும் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு மட்டும் ‘மழைக்காலம்’ என்று சொல்லி, இடைத்தேர்தலை நிறுத்திவைத்துள்ளனர். இது கிரிமினல் பூஸ்ட் அல்லவா?

@வாசு வாசு.

பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் போன்ற எம்.ஜி.ஆர் காலத்துப் பிரபலங்களால் ஏன் தற்போது அ.தி.மு.க-வில் கோலோச்ச முடியவில்லை?


இவர்களெல்லாம் எட்டடி பாய்ந்தவர்கள். தற்போது இருப்பவர்கள் எண்ணூறு அடி பாய்கிறார்களே!

@கேகே2இலக்கியன்.கே.

சமூகப் போராளிகளைக் கண்டு அரசாங்கங்கள் பயப்படுவது ஏன்?

பெரும்பாலும், அவர்கள் உண்மையைப் பேசி மக்களைச் சிந்திக்க வைக்கிறார்கள் என்பதால்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick