மிஸ்டர் கழுகு: கேம் சேஞ்சர் எடப்பாடி!

மக்கு முன்பே அலுவலகத்தில் இருந்தார் கழுகார். காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு, இரண்டு கைகளாலும் மொபைலைப் பிடித்தபடி ஏதோ கேம் ஆடிக்கொண்டிருந்தார். ஆக்ரோஷமான முகத்துடன், ‘‘ஓடுடா... சுடுடா... சீக்கிரம்!’’ என்று கத்தியபடி கேம் விளையாடிய அவரைப் பார்க்கவே பயமாக இருந்தது. சில நிமிடங்கள் கழித்து நம்மை நிமிர்ந்து பார்த்தவர், ‘‘ஜெயிச்சாச்சு!’’ என்றார்.

‘‘என்ன இது?’’ என்றோம்.

‘‘PUBG கேம். நம் ஊரில் வெறித்தனமாகப் பரவிவருகிறது. இப்போது எல்லா வீடுகளிலும் இளசுகள் இந்த பப்ஜி கேம்தான் ஆடுகிறார்கள். அறிமுகமே இல்லாத நான்கு பேர் இணைந்து போர் செய்வது போன்ற கேம். இதேபோன்ற ஒரு கேமை இப்போது எடப்பாடி பழனிசாமி விளையாடுகிறார். தனக்குக் குடைச்சல் கொடுக்கும் அத்தனை பேரையும் வீழ்த்தும் கேம் சேஞ்சர் ஆகியிருக்கிறார் அவர். நீர் வரிசையாகக் கேளும். நான் சொல்கிறேன்...’’

‘‘கேம் ஒன்று?’’

‘‘இதில் வீழ்த்தப்பட்டவர் கவர்னர். துணைவேந்தர் நியமனத்தில் கோடிகள் புரள்வதாக மேடையில் பேசினார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித். ‘கவர்னரே ஊழல் குற்றச்சாட்டு சொல்கிறார்’ என தமிழகமே இதனால் பரபரப்பானது. கவர்னரின் இந்தப் பேச்சை எடப்பாடி ரசிக்கவில்லை. அக்டோபர் 8-ம் தேதி டெல்லி சென்றபோது, சொல்ல வேண்டியவர்களிடம் இதுபற்றிச் சொல்லவேண்டிய விதத்தில் சொன்னார். அங்கிருந்து என்ன தகவல் வந்ததோ, மறுநாளே கவர்னர் மாளிகையிலிருந்து விளக்க அறிக்கை ஒன்று வெளியானது. ‘கவர்னர் யாரையும் குற்றம் சாட்டவில்லை; பணம் கைமாறியதாகவும் சொல்லவில்லை. சில கல்வியாளர்கள் தன்னிடம் சொன்ன தகவலையே அவர் குறிப்பிட்டார்’ என்றது அந்த அறிக்கை. அநேகமாக இந்த அறிக்கையைப் படித்து எடப்பாடி பழனிசாமி மர்மப் புன்னகை புரிந்திருப்பார். நக்கீரன் கோபால் கைது விவகாரத்திலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-வது பிரிவைக் குறிப்பிட்டு கவர்னர் மாளிகையிலிருந்து புகார் பெற்று, கைது நடவடிக்கை நடைபெற்றது. நீதிமன்றத்தில் இந்தப் புகார் எடுபடாமல் போனது. இந்த விவகாரத்திலும் எல்லோரின் கோபமும் கவர்னர்மீதே திரும்பியது. இப்படியாக கவர்னரை வீழ்த்தினார் எடப்பாடி.’’

‘‘கேம் இரண்டு?’’

‘‘இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான கேம். ‘டி.டி.வி.தினகரனை பன்னீர் சந்திக்கவே இல்லை’ என பல அமைச்சர்களும் மறுத்துக்கொண்டிருக்க, ‘சந்தித்தது உண்மை’ என பேட்டி கொடுத்தார் பன்னீர். ‘தினகரனிடம் சந்திப்புக்கான ஆதாரங்கள் இருப்பதால்தான் பன்னீர் இதை ஒப்புக்கொண்டார்’ என தினகரன் ஆதரவாளர்கள் சொன்னாலும், இன்னொரு காரணமும் இருந்தது. ‘எனக்கு எல்லாத் தரப்பிலும் தொடர்புகள் உள்ளன. என்னைச் சாதாரணமாகப் புறக்கணித்துவிட முடியாது’ என எடப்பாடிக்கு உணர்த்தவே பன்னீர் இதைச் செய்ததாக அவரின் ஆதரவாளர்கள் சிலர் சொன்னார்கள். ஆனால், டெல்லியில் இது வேறுவிதமாக எடுத்துச் சொல்லப்பட்டது. தினகரன் தரப்புமீதான கோபம் இன்னமும் டெல்லிக்குக் குறையாத நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ராஜவிசுவாசம் இல்லையே! பன்னீர்மீது டெல்லி தலைமை கோபம் கொள்ளும் அளவுக்கு இந்த விஷயம் ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல... பன்னீர் பக்கம் இருந்த ஆதரவாளர்கள் பலரையும் கரைத்து, தன் முகாமுக்குத் திருப்பிவிட்டார் எடப்பாடி. ‘முன்பாவது பன்னீரை நம்பி 11 எம்.எல்.ஏ-க்கள் போனார்கள். இப்போது போக யாருமில்லை’ என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick