மிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி!

ழுகாரிடமிருந்து போன். காது கொடுத்ததுமே, ‘‘என்ன நீர் ‘கேம் சேஞ்சர்’ என்று பெரிய பில்டப் எல்லாம் கொடுத்தீர். ஆனால், கடைசியில் அவரும் கேமில் சிக்கிக்கொண்டுவிட்டாரே’’ என்று கேட்டோம். கழுகார் சளைக்கவில்லை. ‘‘இப்போதும் எடப்பாடிதான் கேம் சேஞ்சர். அவர் சிலரை வைத்து ஆட்டம் காண்பித்தார். இப்போது அவரை வைத்தே ஆட்டம் காட்ட ஆரம்பித்துள்ளது டெல்லி. மூன்றே நாள்களில் காட்சிகள் இப்படி மாறும் என்று எடப்பாடியேகூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்’’ என்ற கழுகார், ‘‘மற்றவை வாட்ஸ்அப்பில்’’ என்றபடி போனை துண்டித்தார். சில நிமிடங்களில் வாட்ஸ்அப்பில் செய்திவெள்ளம் பெருக்கெடுத்தது...

எடப்பாடிக்கு புரியாத ‘எல்லோரையும்’!

அக்டோபர் 8-ம் தேதி முதல்வர் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தபோது, அவரது கோரிக்கைகள் பலவற்றுக்கும் க்ரீன் சிக்னல் காட்டப்பட்டது. அதேசமயம், அவருக்குத் தெரியாமலே ரெட் சிக்னல்கள் சிலவும் விழுந்துள்ளன. உற்சாக மிகுதியில் அவற்றையெல்லாம் கவனிக்காமல் திரும்பிவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சிலர். நிதி சார்ந்த கோரிக்கை ஃபைல்களோடுதான் டெல்லி சென்றார் முதல்வர். ஆனால், தமிழகத்தின் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்துச் செல்லவில்லை. சந்திப்பின்போது, “எல்லோரையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்று பிரதமர் கூறினாராம். ஆனால், அதையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையாம் எடப்பாடி.

அதாவது, ‘பிரிந்துகிடக்கும் அ.தி.மு.க-வினர் அனைவரையும் ஒன்றாகத் திரட்டிக்கொண்டு வாருங்கள்’ என்பதுதான் அதன் அர்த்தம். பன்னீர்செல்வம்தான் முதலில் டெல்லிக்கு நெருக்கமானவராக இருந்தார். ஒரு கட்டத்தில் அந்த உறவு கெட்டுப்போனது. அதிலிருந்தே தமிழக ஆட்சி மற்றும் கட்சிப்பணிகளில் ஒட்டியும் ஒட்டாமலும்தான் இருந்துவருகிறது பன்னீர் தரப்பு. தனி ஆவர்த்தனம் நடத்திக்கொண்டிருக்கும் தினகரன் தரப்புக்கு, தமிழகத்தில் பரவலாக செல்வாக்கு உள்ளது. இத்தகைய சூழலில், எடப்பாடியை மட்டும் வைத்துக்கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முடியாது என்பதுதான் டெல்லி மேலிடத்தின் கணிப்பு. அதனால், ‘அ.தி.மு.க-வினரை ஒன்றாக இணைக்க வேண்டும்’ என்று நினைக்கிறது டெல்லி பி.ஜே.பி. அப்படி ஒன்றுபட்ட அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேரும்போது, ஜெயம் நிச்சயம் என்றும் கணக்குப்போடுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்துதான், ‘எல்லோரையும்’ என்று சொன்னாராம் பிரதமர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick