மிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி?

ழுகாரிடமிருந்து திடீர் அழைப்பு. “வாரணாசியில் இருக்கிறேன்’’ என்றார். ‘‘ரஜினி பட ஷூட்டிங்கா... ரஜினியுடன் மீட்டிங்கா?’’ என்று கேட்டோம். ‘‘நான் பிஸி. நான் வாட்ஸ்அப்பில் அனுப்புவதைப் பாரும்’’ என்று சொல்லி, தொடர்பைத் துண்டித்தார். தகவல்கள் கொட்டத் தொடங்கின...

திருச்சியில் மாநாடு!

தாமிரபரணி புஷ்கரத்தில் பலரும் நீராடி வருகின்றனர். இந்த நிலையில், ‘பாபநாசம் கோயில் அருகே தாமிரபரணி படித்துறையில் அதிகாலை நேரத்தில் ரஜினிகாந்த் ரகசியமாக வந்து புனித நீராடிவிட்டுச் சென்றார்’ என்று ஒரு செய்தி கிளம்பியது. ஆனால், இது வதந்தி. கடந்த மூன்று வாரமாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ‘பேட்ட’ படப்பிடிப்பில் இருக்கிறார் ரஜினி. 22-ம் தேதி அவர் சென்னை திரும்புகிறார். அதன்பின் பல அரசியல் அதிரடிகள் அரங்கேறலாம்.

தமிழகத்தில் சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில், 42 ஆயிரம் பூத்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் பூத் கமிட்டி அமைத்துவிட்டனர். ஒரு கமிட்டிக்கு 30 பேர் வீதம் கணக்கு போட்டுக்கொள்ளும். இதை ரஜினி பலவிதமாக க்ராஸ் செக் செய்த பிறகே திருப்தியானாராம். போலியாகக் கணக்குக் காட்டிய சில மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர். அடுத்தகட்டமாக, மன்ற மாநாடு நடக்க இருக்கிறது. ‘ரசிகர்கள் தமிழகத்தின் எந்த மூலையிலிருந்து வந்தாலும், ஆறு மணிநேரத்துக்குள் வீடு திரும்பும் தூரத்தில் இருக்கவேண்டும். அதற்குத் தகுந்தாற்போல இடத்தைத் தேர்ந்தெடுங்கள்’ என்று ரஜினி சொல்லியிருக்கிறார். இடம் தேடிக்கொண்டிருக் கிறார்கள். அநேகமாக திருச்சியில் மாநாடு நடக்கக்கூடும். இந்த மாநாட்டில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை வெளியிடப் போகிறாராம். தீபாவளிக்கு முன்னதாக, மாநாடு பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று அடித்துச் சொல்கின்றனர் மன்றத்தினர். ‘இந்த தீபாவளிக்கு ரஜினி வெடி வெடிக்கும்’ என அதைத்தான் மக்கள் மன்றத்தினர் பரபரப்பாகப் பேசிவருகிறார்கள்.

நவம்பர் 29-ம் தேதி ‘2.0’ படம் ரிலீஸ். ‘பேட்ட’ படத்தின் பெரும்பாலான காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டன. மிச்ச சொச்சத்தையும் விரைவில் முடித்துவிடுவார். அநேகமாக ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று மாநாடு நடக்கக்கூடும் என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர். சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, ‘நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி பிரதமர் கருத்துக்கேட்டார்’ எனச் செய்தி வந்தது. இதைத் தொடர்ந்து, ‘தேர்தலுக்குத் தயாராகுங்கள்’ என டெல்லியிலிருந்து தங்கள் தரப்புக்கு சிக்னல் வந்திருப்பதாக ரஜினி மக்கள் மன்றத்தின் மூத்த நிர்வாகிகள் சொல்லி வருகிறார்களாம். 

அதேசமயம், மேற்கொண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாவதையும் ரஜினி நிறுத்தவில்லை. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதைக் குறிப்பிடும் ரஜினியின் எதிர் முகாம், ‘வழக்கம்போல தன் படங்களின் வெற்றிக்காக அரசியலுக்கு வருவதுபோல பேசிக்கொண்டிருக்கிறார். ஒருபோதும் அவர் வரவே மாட்டார். தீபாவளிக்கு ரஜினி பட்டாசு வெடிக்காது’ என்கிறார்கள் நக்கலாக!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick