RTI அம்பலம்: கட்டுப்படுத்த முடியாததா காட்டுத்தீ?

மார்ச் மாதம் தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீ, தமிழக மக்கள் மனதில் இன்னும் உறைந்துநிற்கும் ஒரு சோகம். அதைப் போலவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆனைமலை புலிகள் சரணாலயப் பகுதியில் உள்ள டாப்ஸ்லிப்பிலும் பெரும் காட்டுத்தீ ஏற்பட்டது. இப்படிப் பல சம்பவங்களைச் சொல்லலாம்.

குரங்கணி சம்பவத்தைத் தொடர்ந்து, சமீபத்தில் மலையேற்ற விதிகள் தமிழக அரசால் வகுக்கப்பட்டுள்ளன. ‘மலையேற்றம் மேற்கொள்பவர்களின் பாதுகாப்பு மற்றும் வன வளங்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன’ என்று சொல்கிறது அரசு.  இந்தநிலையில்தான்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ‘விகடன் ஆர்.டி.ஐ குழு’ காட்டுத்தீ பற்றிய தகவல்களைத் திரட்டியது. அதன் சாரம்சம் இங்கே...

தமிழகத்தில் 2009 முதல் 2017 வரை 5,336 காட்டுத்தீ சம்பவங்கள் நடந்துள்ளன. 13,679 ஏக்கர் வனம் தீக்கிரையாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூர் வனச்சரகத்தில் மட்டும் 1,443 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மதுரை வனச்சரகத்தில் 998 காட்டுத்தீ சம்பவங்களால் 1,624 ஏக்கர் காடு நாசமாகியுள்ளது. இப்படியாக தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 1,500 ஏக்கருக்கு மேற்பட்ட வனம் தீயால் நாசமாகிறது. 

மின்னல், இடி, காய்ந்த சருகுகளும் மரப்பட்டைகளும் உராய்ந்து புகைதல் போன்ற இயற்கைக் காரணங்களால், 10 சதவிகிதக் காட்டுத்தீ சம்பவங்கள் மட்டுமே நிகழ்கின்றன. மீதி 90 சதவிகிதம் மனிதர்களால்தான் உண்டாகின்றன. வனப்பகுதிக்கு அருகிலிருக்கும் விவசாய நிலங்களில் மண்ணைச் செழுமைப்படுத்த பயிர்களுக்கு நெருப்பு வைத்துவிடுவார்கள். அந்த நெருப்பு வனத்துக்குள் பரவிக் காட்டுத்தீ உருவாகும். காட்டுக்குள் செல்பவர்கள் புகைபிடித்துவிட்டு அணைக்காமல் போடும்போது தீப்பிடிக்கும். சமையலுக்காக நெருப்பை மூட்டி சரியாக அணைக்காமல் செல்வதாலும் காட்டுத்தீ ஏற்படுகின்றது.

சத்தியமங்கலம், கோவை, ஆனைமலைப் பகுதிகளில் சீமார் புல் அதிகம். இதை சேகரிக்கப்பவர்கள், அடுத்த மழையில் தழைத்து வளரவேண்டும் என்பதற்காக அதன் சருகுகளை எரிப்பார்கள். இதுவும் காட்டுத்தீ ஏற்பட ஒரு காரணம். சந்தன மரங்களைக் கடத்துபவர்களும் தீ வைப்பது உண்டு. மரங்களைக் கடத்துவதற்காக வெட்டும்போது, வெட்டிய அடையாளத்தை மறைக்க அந்தக் காட்டையும் கொளுத்திவிடுகிறார்கள். ‘‘டாப்ஸ்லிப்பில் இப்படியான சம்பவங்கள் சகஜம்” என்கிறார்கள், காட்டுயிர்ப் பாதுகாப்புச் செயற்பாட்டாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick