மினி மீல்ஸ்

அமைச்சரை சாடும் ஸ்ரீப்ரியா!

கு
ண்டக்க மண்டக்க பேசிச் சர்ச்சைகளை உண்டாக்குவதில் செல்லூர் ராஜுவுக்கு இணையானவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. சமீபத்தில் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரபாலாஜி, ‘‘கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஒரு சப்பாணிக் குழந்தை. அது வளர்ந்தால் நாட்டுக்கே ஆபத்து. இதைக் கருவிலேயே அழித்துவிட வேண்டும்’’ என்றார். அது, பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ‘‘உடல் குறைபாடு உடையவர்களை மாற்றுத்திறனாளிகள் போன்ற கண்ணியமான வார்த்தைகளால் அழைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ‘சப்பாணி’ என்ற வழக்கொழிந்த வார்த்தையை அமைச்சரே பயன்படுத்தலாமா?’’ என்று கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், அமைச்சரின் கருத்துகளை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார், மக்கள் நீதி மய்யத்தின் மாநில நிர்வாகியான நடிகை ஸ்ரீப்ரியா. ‘‘தாய்மையின் பெருமை அறியாதவர் போலும் மாண்புமிகு (!) அமைச்சர் அவர்கள். மாற்றுத்திறமை கொண்டவர்கள், தேசிய விருது பெறும் திறமை கொண்டவர்கள். ஒரு பெண்ணை, காலம் சென்ற உங்கள் தலைவரை (ஜெயலலிதா) தெய்வமாகப் போற்றுவதாகக் கூறிக்கொள்ளும் நீங்கள், இப்படிப் பெண்மையையும் அவள் ஈன்றெடுக்கும் பிள்ளையையும் கேவலப்படுத்தும் குணத்தை மாற்றிக்கொண்டால் பெண்களாகவும் அன்னையராகவும் உங்களை மன்னிக்க முயல்வோம்’’ என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick