என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (நீலகிரி) | Enna Seithar MP - NILGIRIS GOPALAKRISHNAN - Junior Vikatan | ஜூனியர் விகடன்

என்ன செய்தார் எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (நீலகிரி)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தத்தெடுத்த ஊர் பெயரே தெரியாத எம்.பி

#EnnaSeitharMP
#MyMPsScore

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்த நேரம். அவிநாசி அருகிலுள்ள தெக்கலூர் பாலத்துக்குப் பக்கத்தில் வந்து நின்றது நீலகிரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கோபாலகிருஷ்ணனின் பிரசார வேன். வேட்பாளரைச் சூழ்ந்துகொண்டார்கள் அத்திக்கடவு - அவிநாசி திட்டப் போராட்டக் குழுவினர். “வெற்றிபெற்றதும் முதல் வேலை, இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதுதான்” என்று சொன்னார் கோபாலகிருஷ்ணன். “நாலரை வருஷமாச்சு. அந்தத் திட்டமும் வரலை. கோபாலகிருஷ்ணனையும் பார்க்க முடியலை” என்று புலம்புகிறார்கள் நீலகிரி தொகுதி வாக்காளர்கள்.

மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியிலிருந்து ஒரு பெரிய மரத்தைப்போல நான்கு மாவட்டங் களில் வேர் பரப்பியிருக்கிறது நீலகிரி தொகுதி. இதன் எம்.பி., நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு என நான்கு மாவட்டங்களின் கலெக்டர்களையும் போலீஸ் உயர் அதிகாரிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஜெயலலிதாவுக்கு நீலகிரி தொகுதி எப்போதுமே ஸ்பெஷல். அதனால்தான் இந்தத் தொகுதியைச்் சேர்ந்த அர்ஜுனனையும், ஏ.கே.செல்வராஜையும் ராஜ்யசபா எம்.பி-க்களாக நியமித்தார் அவர். இவர்களுடன் கோபாலகிருஷ்ணனையும் சேர்த்து இந்த ஏரியாவுக்கு மூன்று எம்.பி-க்கள். மற்ற இருவரை விடுங்கள். மக்கள் ஓட்டு போட்டுத் தேர்வானவர் கோபாலகிருஷ்ணன்தானே... அவர் என்ன செய்திருக்கிறார்?

“எவ்வளவு தாங்க பொறுமையா இருக்குறது? ஒருகட்டத்துல ‘எங்க எம்.பி கோபால கிருஷ்ணனைக் காணவில்லை’னு போஸ்டர் ஒட்ட வேண்டியிருந்தது. ஒருமுறை கட்சிக் கூட்டத்தில் கோபாலகிருஷ்ணன் பேச எழுந்தபோது, ‘ஜெயிச்சதுக்கு நன்றி சொல்லக்கூட தொகுதிப் பக்கம் வரலை... பெருசா பேச வந்துட்டாரு. கம்முன்னு உட்காருங்க’ என்று கட்சிக்காரங்களே கோஷம் எழுப்புனாங்க” என்பதுபோன்ற கருத்துகளே தொகுதியில் அதிகம் ஒலிக்கின்றன.

Editor’s Pick