RTI அம்பலம்: உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போட ரூ.45 லட்சம் செலவு!

முடக்கப்பட்ட மக்கள் ஜனநாயகம்!

ட்டம் - ஒழுங்குப் பிரச்னை நிலவுகிற காஷ்மீரில்கூட உள்ளாட்சித் தேர்தல் நடந்துவிட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடத்தப்பட்டிருக்க வேண்டிய தமிழக உள்ளாட்சித் தேர்தல், இன்னும் நடத்தப்படவில்லை. அப்பட்டமான அரசியல் சட்டமீறலான இதைச் செய்வதற்கு, வழக்குக்காக  மட்டுமே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ரூ. 45 லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் 2016, அக்டோபர் 25-ம் தேதி முடிவடைந்தது. உள்ளாட்சிப் பதவிகளில் இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்கக் கோரி தி.மு.க போட்ட வழக்கைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்பிறகு, ‘ஏன் இன்னும் தேர்தல் நடத்தவில்லை’ என்று நீதிமன்றமே பலமுறை கேள்விகள் கேட்டும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன்வரவில்லை. தமிழக அரசின் அழுத்தத்தின் பேரில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப் போடுவதற்கான வழக்குகளுக்கு மட்டுமே லட்சக்கணக்கில் செலவு செய்துவருவதாக நமக்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்த தகவல்களை ‘விகடன் ஆர்.டி.ஐ குழு’ மூலம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் கோரினோம். ‘தகவல்களைத் தர முடியாது’ என்று முதலில் சொன்ன மாநில தேர்தல் ஆணையம், பின்பு நாம் மேல்முறையீட்டு அலுவலரிடம் முறையிட்ட பிறகு, தகவல்களை அளித்தது. அதன்படி, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 2016 செப்டம்பர் முதல் 2018 செப்டம்பர் வரை, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் மாநில தேர்தல் ஆணையம் சார்பாக ஐந்து வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர். தேர்தலைத் தள்ளிப்போடும் வகையில்தான், இவர்களின் வாதங்கள் இருந்தன. இவர்களுக்குக் கட்டணமாக 2018, செப்டம்பர் மாதம்வரை ரூ.45,58,000 செலவு செய்திருக்கின்றனர். தேர்தலையே நடத்திவிடக் கூடாது என்கிற முனைப்பில் தமிழக ஆளும் தரப்பு இருப்பதால், இந்த வழக்குகள் முடிவுக்கு வரும்வரை இன்னும் பல லட்ச ரூபாய் செலவாகக் கூடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick