மிஸ்டர் கழுகு: “ஏழு பேரை இழுத்தால் ஆட்சி கவிழும்!” - தினகரன் திட்டம்

வேகமாக உள்ளே நுழைந்த கழுகார், ‘‘கடந்த இதழில் வெளியான ‘நாக் அவுட் ஜெயக்குமார்?’ கவர் ஸ்டோரி அசத்தல். எக்ஸ்க்ளூசிவாக செய்திகளை அள்ளித்தந்த ஜூ.வி டீமுக்குப் பாராட்டுக்கள்’’ என்று பூங்கொத்தை நீட்டி அசரடித்தார். அதேவேகத்தில் செய்திகளுக்குள் புகுந்தார்.

‘‘18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு இப்படி வரும் என எதிர்பார்த்திருப் பார்களா என்பது தெரியாது. ஆனால், இந்த வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஞாயிற்றுக்கிழமையே வந்துவிட்டது. அதனால்தான் தினகரன், சென்னை அசோக் நகரில் உள்ள தன் கட்சி அலுவலகத்தில் இந்த 18 பேருடன் ஆலோசனை நடத்தினார். தீர்ப்பு எப்படியும் தங்களுக்குச் சாதகமாக வரும் என அவர் நம்பினார். ‘தகுதிநீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்ததும், இந்த 18 பேரின் பதவி உயிர்பெற்றுவிடும். அப்போது யாரும் அணி தாவிச்சென்று எடப்பாடியுடன் சேர்ந்துவிடக் கூடாது’ என்பதற்காகவே அவர்களைக் குற்றாலத்துக்கு அனுப்பி வைத்தார். அதே ஞாயிற்றுக்கிழமை மு.க.ஸ்டாலின் வீட்டிலும் ஒரு ரகசிய ஆலோசனை நடந்தது. ‘தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி அரசுமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கு என்ன செய்யலாம்’ என அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது.’’

‘‘ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லையே?’’

‘‘தினகரனுக்கு நெருக்கமானவர்கள், இதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள். இதேபோல தி.மு.க-வும் பல வாய்ப்புகளை ஆலோசித்து வருகிறது. முதல் வாய்ப்பு, ஆட்சியைக் கவிழ்ப்பது. இந்தக் கணக்கைக் கொஞ்சம் பாருங்கள். 234 தொகுதிகளில், ஏற்கெனவே ஏ.கே.போஸ் மறைவால் திருப்பரங்குன்றமும், கருணாநிதி மறைவால் திருவாரூரும் காலியாக உள்ளன. இப்போது 18 தொகுதிகள். மொத்தம் 20. எனவே, இப்போது சட்டமன்றத்தின் பலம் 214. இதில் பெரும்பான்மைக்கு 108 எம்.எல்.ஏ-க்கள் பலம் தேவை. ‘எங்கள் ஆட்சிக்கு 109 எம்.எல்.ஏ-க்கள் பலம் உள்ளது’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் 97 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். தினகரன் சுயேச்சை. அவர் பக்கம் இப்போது அ.தி.மு.க-வைச் சேர்ந்த அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் உள்ளனர். இவர்கள் தவிர, இரட்டை இலை சின்னத்தில் நின்று ஜெயித்த கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகியோரையும் தினகரனின் கணக்கில்தான் சேர்க்கிறது ஆளும்கட்சி. எனவே, தினகரன் கணக்கு ஏழு. தி.மு.க கூட்டணியினரையும் இதையும் கூட்டினால், ஆளும்தரப்புக்கு எதிரானவர்களின் பலம் 104. சபாநாயகரைக் கழித்துவிட்டுப் பார்த்தால், ஆளும்கட்சியின் பலம் 109.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick