நானாதான் தொட்டேன்... நானாதான் கெட்டேன்!

வழிப்போக்கன் சொன்ன வாழ்க்கைப் பாடம்

“சார், என்னை மன்னிக்கணும்!” என்றபடி ஒரு பீடியைப் பற்றவைக்கும் உதயக்குமார், நொய்யலாற்றுப் படித்துறையில் மறைவாகத் திரும்பி நின்று ‘குப் குப்’பென இழுக்கிறார். எங்கிருந்தோ ஓடிவந்து அவர் காலைச் சுற்றுகிறது ஒரு நாய்க்குட்டி. கோவை பேரூர் கோயிலில் சில மாதங்களாக யாசகம் செய்துவரும் உதயக்குமார், சில ஆண்டுகளுக்கு முன்புவரை சுற்றுவட்டாரக் கிராமப் பட்டிமன்றங்களில் பிரபலமான நபர். முன்பு அவரது பேச்சில் கிறங்கிக்கிடந்தவர்கள் எல்லாம், இன்று அவரது நிலையைக் காணச் சகிக்காமல் கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் உதயக்குமாரை பேசவைத்து, ‘சாலையோரக் கவிஞர்’ என்ற அடைமொழியுடன் ஒரு வீடியோவை வாட்ஸ்அப்பில் போட, அது பலரின் கவனத்தையும் குவித்துள்ளது.

பீடித் துண்டை எறிந்துவிட்டு, நாயை வாரி மடியில் கிடத்திக்கொண்டு பேசுகிறார் உதயக்குமார். “வீட்டுல ஒன்பதாவதாகப் பிறந்த கடைக்குட்டிப் புள்ளை நான். சின்ன வயசுல என்னை உளறுவாயன்ம்பாங்க... நசநசன்னு பேசிக்கிட்டே இருப்பேன். வறுமையில ரெண்டாப்புக்கு மேல படிக்க முடியலை. அப்பா வீட்லயே நகை வேலை செய்வார். நாங்க அவருக்கு உதவுவோம். ரேடியோ கேட்குறதுதான் அப்பப் பொழுதுபோக்கு. கண்ணதாசன் பாட்டுன்னா எனக்கு உசுரு. அப்படியே மனப்பாடம் ஆகிரும். அம்மா என்னை கிருபானந்த வாரியார் சொற்பொழிவுகளுக்கு அழைச்சிட்டுப் போவாங்க. அக்கம்பக்கம் வீடுகள்ல விகடன், கல்கினு வாங்கிப் படிச்சிடுவேன். அதெல்லாமே இந்த உளறுவாயன் பேசுறதுக்கு ஏகப்பட்ட தீனியைக் கொடுத்துச்சு. நான் பேசறதை எல்லோரும் ரசிச்சாங்க. அதுக்காவே நட்பு வட்டம் உருவாச்சு. அப்புறம் சின்னதா ஒரு நகைப்பட்டறை வெச்சு கூலிக்கு வேலை செஞ்சிட்டு இருந்தேன். விஜயகலான்னு ஒரு பொண்ணைப் பார்த்து எனக்குக் கல்யாணம் பண்ணிவெச்சாங்க. வாழ்க்கை சந்தோஷமா நகர்ந்துச்சு. அப்போதான் கோணியம்மாள் என் வாழ்க்கையில வந்தாள்...” என்று நிறுத்தும் உதயக்குமார், பழைய நினைவுகளில் மூழ்கித் திடீரென்று கண்கலங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick