மினி மீல்ஸ்

எது தலைநகரம்?

திருப்பூர் மாவட்டத்துக்கு எது தலைநகரம். எல்லோரும் ‘திருப்பூர்’ என்பார்கள். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன், ‘‘உடுமலைப்பேட்டை’’ என்கிறார். மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் ஊர் அது. ‘‘மாவட்டத்தின் கடைசியில இருக்க ஊர் அது. இந்த மினிஸ்டர் ஒருத்தருக்காக மாவட்டத்தின் தலைநகரை விட்டுட்டு, உடுமலைல போய் எப்போ பார்த்தாலும் அரசு நிகழ்ச்சிகளை வெச்சிட்டு இருக்காங்க. சமீபத்துல ஆசிரியர்களுக்கு விருது கொடுக்கும் நிகழ்ச்சி நடந்துச்சு. திருப்பூர்ல இருந்து வேன் வெச்சு அத்தனை ஆசிரியர்களையும் உடுமலைக்குக் கூட்டிட்டுப் போனாங்க. மாவட்டத்தின் தலைநகரையே மாற்றியது போல இருக்கு” என்கிறார் குணசேகரன்.

இந்தக் கோபத்தை அவர் வெவ்வேறு வகைகளில் காட்டுகிறார். திருப்பூரில் ஆகஸ்ட் 25-ம் தேதி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ நிகழ்ச்சிக்கான பேனரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெயர் மட்டுமே இருந்தது. குணசேகரன் பெயர் இல்லை. ‘‘அவனவன் அப்பன் வீட்டு சொத்துன்னு நினைச்சிட்டீங்களா? ஃபிளெக்ஸ் பேனர்ல என் பெயரைப் போடாம, நீங்க எப்படி என் தொகுதிக்குள்ள நிகழ்ச்சி நடத்தலாம்?’’ என அதிகாரிகளிடம் அவர் பொங்கினார். ஆனால், ‘‘அமைச்சர் பெயரை மட்டும் போட்டால் போதும் என எங்களுக்கு உத்தரவு வருது. நாங்கள் என்ன செய்யமுடியும்?’’ எனப் புலம்புகிறார்கள் அதிகாரிகள். 

ஆகம விதியை மீறிய அமைச்சர்! 

செ
ய்தி மற்றும் மக்கள்தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவின் மகன் அருண்குமாரின் திருமணம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெற்றது. சொந்த ஊரில் கோயில் விழாவில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி போய்விட்டதால், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் சில அமைச்சர்கள் மட்டும் வந்திருந்தனர். திருக்கோயில் வளாகத்திற்குள் அலங்காரப் பந்தல் அமைத்து சுவாமி – அம்பாளுக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடத்தப்படும். இந்நிலையில், ஆகம விதிகளை மீறி, வசந்த மண்டபத்தில் பந்தல் அமைத்துத் தன் மகனின் திருமணத்தை கடம்பூர் ராஜு நடத்தினார். இது, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  

அமைச்சர் மகன் திருமணம் தவிர, அங்கு மேலும் சில திருமணங்களும் நடைபெற்றன. மற்ற திருமணங்கள், செண்பகவல்லி அம்பாள் சந்நிதி முன்பு உள்ள மண்டபத்தில் அவசரகதியில் நடத்தி முடிக்கப்பட்டன. அமைச்சர் இல்லத் திருமண நிகழ்ச்சிகள் கோயில் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த செய்தி மக்கள் தொடர்புத்துறைக்குச் சொந்தமான விளம்பர எல்.இ.டி., வாகனத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இரட்டை வரவேற்பு!

நா
கை மாவட்டம், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜ் மகன் திருமணம் ஆகஸ்ட் 30-ம் தேதி திருக்கடையூரில் நடந்தது. இதில் பங்கேற்க 29-ம் தேதி வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் கடலூர் வழியாக திருக்கடையூர் சென்றார். அவருக்குத் தொழில்துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமையில் கடலூரில் வரவேற்பு அளித்தனர். கடலூர் எம்.பி-யும் மேற்கு மாவட்டச் செயலாளருமான அருண்மொழித்தேவன் தலைமையில் இதர எம்.எல்.ஏ-க்கள் இணைந்து சிதம்பரத்தில் வரவேற்பு அளித்தனர்.

எம்.சி.சம்பத்மீது கடும் அதிருப்தியில் உள்ள அருண்மொழித்தேவன் அணியினர், சம்பத்தை மாற்ற வேண்டும் என முதல்வருக்குக் கடும் நெருக்கடி கொடுத்துவருகின்றனர். கடந்த ஒரு வருடமாகவே சம்பத் கலந்துகொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளையும் இவர்கள் புறக்கணிக்கின்றனர்.

சில நாட்கள் முன்பு கொள்ளிடம் கரையோர வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் சம்பத் தனியாகப் பார்வையிட்டார். பின்னர் அருண்மொழித்தேவன் தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் தனியாகப் போய் நிவாரண உதவிகள் வழங்கினார்கள். இதில் அதிகாரிகள்தான் பாவம், எல்லா வேலைகளையும் இரண்டு முறை செய்ய வேண்டியிருக்கிறது.

என்ன பேசினார்கள்?

தி
.மு.க-வின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட அதே நாளில், சென்னையில் வாஜ்பாய்க்கு புகழஞ்சலிக் கூட்டத்தை பி.ஜே.பி நடத்தியது. தி.மு.க சார்பில் பங்கேற்றவர், கனிமொழி. அ.தி.மு.க சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். இருவருக்கும் இடையில் தமிழிசை அமர்ந்திருந்தார். தமிழிசை பேச எழுந்ததும், கனிமொழியும் ஜெயக்குமாரும் நீண்ட நேரம் ஏதோ பேசிச் சிரித்தபடி இருந்தனர். மேடையில் இருந்த அனைவருமே இதை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick