இது தனிப்பட்ட மதத்துக்கான விழா அல்ல! - தாமிரபரணி புஷ்கர சர்ச்சை

தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை, தண்ணீர் சுரண்டல் போன்ற பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, புஷ்கர விழாச் சர்ச்சை தற்போது தீவிரமடைந்துவருகிறது. தாமிரபரணி ஆற்றில் அக்டோபர் 11 முதல் 23 வரை புஷ்கரம் விழா நடத்த முடிவுசெய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. ‘‘நாடு முழுவதுமிருந்து சாதுக்கள், சந்நியாசிகள், பக்தர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் என 50 லட்சம் முதல் ஒரு கோடி பேர் இந்த விழாவுக்கு வருவார்கள்’’ என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கணிக்கிறார்கள். அதனால், ‘இந்த விழாவுக்கு அரசு சார்பில் உதவிகள் செய்ய வேண்டும், அரசே முன்னின்று விழாவை நடத்திக்கொடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இன்னொருபுறம், ‘‘இந்த விழாவை நடத்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது’’ என்கிற எதிர்ப்புக்குரலும் ஒலிக்கிறது.

புஷ்கரம் என்றால், ‘மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளும் அந்தந்த ராசிகளுக்கு உரித்தான ஆறுகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மை பயப்பது’ என்று விளக்கம் சொல்கிறார்கள். 2017 செப்டம்பரில், மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம் விழா நடைபெற்றது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று நீராடினார்கள். அதுபோல, இந்த ஆண்டு தாமிரபரணியில் புஷ்கரம் விழாவை நடத்த இருக்கிறார்கள். சிருங்கேரி மடத்தின் சார்பாக அக்டோபர் 11-ம் தேதி புஷ்கரம் விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு, தாமிரபரணி சிலை செய்து அதனைப் பல்வேறு நகரங்களின் வழியாக எடுத்துவந்தனர். பாபநாசத்தில் அந்தச் சிலையை நிறுவ ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆனால், காஞ்சி சங்கர மடம் உள்ளிட்ட சில மடங்களின் மடாதிபதிகள் அக்டோபர் 12-ம் தேதி முதல் புஷ்கரம் கொண்டாடுகின்றனர். இதுதவிர தனித்தனிக் குழுக்களும் தாங்களாகவே புஷ்கரத்துக்கு ஏற்பாடு செய்துவருவதால் மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick