மிஸ்டர் கழுகு: அம்பலமாகும் ஆவணங்கள்... ஆட்டம் காணும் அரசு! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் கழுகு: அம்பலமாகும் ஆவணங்கள்... ஆட்டம் காணும் அரசு!

ரியான நேரத்தில் கழுகார் அலுவலகத்தில் நுழைய... ‘‘வாங்க பிக் பாஸ்’’ என்று வரவேற்றோம்.

‘‘ம்... பிக் பாஸ் என்கிற வரவேற்பிலேயே பொடி வைக்கிறீர். உண்மையிலேயே பிக் பாஸ், தன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். அதாவது, ஆவணங்களை வைத்து ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது’’ என்றார் கழுகார். அவர் சொல்வதைக் கேட்கத் தயாரானோம்.

‘‘அ.தி.மு.க-வையும் இந்த ஆட்சியையும் இத்தனை நாட்களாக டெல்லி ஆட்சியாளர்கள் உயிர்ப்புடன் வைத்திருப்பதே, சில பல காரணங்களுக்காகத்தான். அதனால்தான், இரண்டாக இருந்தவர்களை இணைத்தார்; எதிர்த்தவர்களை துவம்சம் செய்தார்; தொடர்ந்து ஆட்சிக்கு முட்டும் கொடுக்கிறார் பிக்பாஸ். ஆனாலும், தற்போதைய அ.தி.மு.க மற்றும் அதன் ஆட்சியில் இருப்பவர்களை வைத்துக்கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்டார் பிக்பாஸ். பெரிதாக மக்கள் செல்வாக்குள்ள தலைவர்கள் யாரும் அதில் இல்லை. தங்களின் சொல்படி ஆடுகிறார்கள் என்றாலும், பல சமயங்களில் காலைவாரிவிடுகிறார்கள் என்ற கோபமும் எழுந்திருக்கிறது. அதனால்தான், இந்த ஆட்சியே தேவையில்லை என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு, அவ்வப்போது ரெய்டுகள் எல்லாம் நடத்தப்படுகின்றன. அப்போதும் பிக்பாஸ் எதிர்பார்ப்பது போல் நடக்கவில்லை.’’

‘‘அதுதான் ஊரறிந்த விஷயமாயிற்றே!’’

‘‘அதனால்தான், கைவசம் இருக்கும் ஆவணங்களை வைத்தே இந்த ஆட்சிக்குச் சிக்கலை ஏற்படுத்தும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இத்தனை காலமாக இருந்ததுபோல தமிழக அரசின் செயல்பாடுகளைக் கண்டும் காணாமல் இருக்கப்போவதில்லையாம் மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், மாநிலவாரியாகக் கூட்டணி கணக்குகளையும் சரிப்படுத்த நினைக்கிறது பி.ஜே.பி. அந்த வகையில் தமிழகக் கணக்குகளையும் தீர்க்கும் வேலைகள் முதலாவதாகத் தொடங்கப்பட்டுள்ளன.’’

‘‘கூட்டணிக் கணக்குக்கும் ஆவணங்களுக்கும் என்ன சம்பந்தம்?’’

‘‘தமிழகத்தில் அ.தி.மு.க அல்லது தி.மு.க., இந்த இரண்டில் ஏதாவதொரு கட்சியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே, நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களைப் பெறமுடியும். ஸ்டாலினின் பொதுக்குழு பேச்சு மூலமாக, கிட்டத்தட்ட கதவைச் சாத்திவிட்டோம் என்று ரெட் சிக்னல் போட்டுவிட்டது தி.மு.க. மிச்சமிருக்கும் ஒரே சாய்ஸ், அ.தி.மு.க மட்டுமே. ஆனால், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வை வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திப்பது என்பது கிட்டத்தட்ட தற்கொலைக்குச் சமம் என்று நினைக்கிறது பி.ஜே.பி. அதனால்தான், அ.தி.மு.க எனும் கட்சிக்குள் ஆளுமையான சில நபர்களை நுழைத்து, அதன்பிறகு தேர்தலைச் சந்திக்க நினைக்கிறது பி.ஜே.பி. இதற்கு, எடப்பாடி தரப்பு ஆரம்பத்திலிருந்தே ஒப்புக்கொள்ள மறுக்கிறது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick