“அமெரிக்கா செல்வோம்!” - ஆர்.பி.உதயகுமாரும் பின்னே ஆயிரம் சைக்கிள்களும்

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டால் அமெரிக்காவிலும் சைக்கிள் பேரணி நடத்துவோம்’’ என்று கூறி, தமிழக மக்களை மட்டுமில்லாமல் அமெரிக்க மக்களையும் அதிர வைத்துள்ளார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

எடப்பாடி ஆட்சியில் தமிழகத்தில் பிரச்னைகள் இல்லாத நாட்களே இல்லை. தங்கள் ஆட்சியில்தான் ஆயிரக்கணக்கில் போராட்டங்கள் நடப்பதாக, தங்களுக்கு எதிராக மக்கள் வெளிப்படுத்தும் கோபத்தைக்கூடப் பெருமையான விஷயமாக முதல்வர் சொல்லிக்கொள்கிறார்.

மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடக்கின்றன. சிவகாசியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலேயே முதல்வர் எதிரில் இரண்டு பெண்கள் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு அரசுத் துறையிலிருந்தும் பல புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. ‘தாலிக்குத் தங்கம் வரவில்லை’, ‘உதவித்தொகை வரவில்லை’ என எளிய மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலை உள்ளது. காவிரியில் தண்ணீர் வந்தும் பாசனத்துக்கு உதவவில்லை என விவசாயிகள் கதறுகிறார்கள். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், ‘கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்... கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்ற கதையாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஊர் ஊராகச் சென்று சைக்கிள் ஓட்டி மக்களுக்கு வித்தை காட்டிவருகிறார். கேட்டால், ‘‘எடப்பாடி ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு விளக்கிச் சொல்ல இந்த சைக்கிள் பேரணி’’ என்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick