மிஸ்டர் கழுகு: குட்கா விவகாரத்தில் அப்ரூவர் யார்?

‘‘நியூஸ் ஜெ என்கிற பெயரில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளனர் எடப்பாடியும் பன்னீரும். இனி இதுதான், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வத் தொலைக்காட்சி. இதன் லோகோ அறிமுக விழாவுக்காக, ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழில் அள்ளிவிடப்பட்ட விளம்பரங்கள் 50 பக்கங்களுக்கும் மேல். ஜெயலலிதா இருந்தபோது நமது எம்.ஜி.ஆரில் இத்தனைப் பக்கங்களுக்கு விளம்பரங்கள் வந்ததாக நினைவில்லை’’ என்றபடி வந்தார் கழுகார்.

‘‘அசத்துகிறார்களே!’’

‘‘நியூஸ் ஜெ என்ற தொலைக்காட்சி, தற்போதைக்கு பாலிமர் நிறுவனத்தின் கன்னட சேனல் உரிமையைப் பெற்றுத்தான் ஆரம்பித்துள்ளனர். பெயர் மாற்றத்துக்கு விரைவில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெறுவார்களாம். இப்போதைக்கு சேனலின் லோகோ, இணையதளம் மற்றும் ஆப் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. கூடவே ஏகப்பட்ட பிரச்னைகளும் தொடங்கிவிட்டன.’’

‘‘ஆரம்பிக்கவே இல்லையே?’’

‘‘இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி, ‘ஜெயலலிதா ஒரு தொலைக்காட்சியை உருவாக்கினார். ஆனால், இன்றைய தினம் அது யாரிடம் செல்லக்கூடாது என்று நினைத்தோமோ, அவர்களிடம் சென்றுவிட்டது. அதற்கு மாற்றாகத்தான் இது’ என்றார். ஆனால், ஜெயா தொலைக்காட்சியின் உரிமை எப்படி அ.தி.மு.க என்ற கட்சியிடம் இல்லாமல், சசிகலா குடும்பத்திடம் இருந்ததோ... அதேபோல், நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் உரிமையும் கட்சியின் பெயரில் இல்லை. அது, Mantaro Network Private Limited என்ற நிறுவனத்தின் தொலைக்காட்சி. இந்த நிறுவனத்துக்கு, அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன் நிர்வாக இயக்குநர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் மகன் டாக்டர் விவேக், அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ்குமார் மற்றும் முதல்வர் எடப்பாடியின் நண்பரான வாழப்பாடி குபேந்திரன் ஆகியோர்தான் இயக்குநர்கள். எடப்பாடியின் இன்னொரு நண்பரான இளங்கோவன் குடும்பத்துக்கும் பங்கு உள்ளது. ஆனால், சேனலுக்கான மறைமுகச் செலவுகள் பலவும், அ.தி.மு.க-வின் இதர வருமானங்களிலிருந்தே போகின்றன. சிலரின் கட்டுப் பாட்டில் இருக்கும் சேனலுக்கு கட்சியின் பணம் செலவு செய்யப்படுவதை அறிந்து கட்சியின் முக்கியப்புள்ளிகளே முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick