RTI அம்பலம்: கறுப்புப் பணத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா?

கணக்குத் தர மறுக்கும் தமிழக அரசு

வ்வொரு மாவட்டத்திலும் மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்டுவந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா, இம்மாதம் 30-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், கணக்கில் வராத கறுப்புப் பணம் கோடிக்கணக்கில் இந்த விழாக்களுக்கு செலவழிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கி, தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது. சென்னை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது. கன்னியாகுமரியில் இம்மாதம் 22-ம் தேதி விழா நடக்கிறது. சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நிறைவு விழாவாக இது நடைபெற உள்ளது. இந்த விழாக்களுக்கான செலவுகள் பற்றிய வெளிப்படைத்தன்மை தமிழக அரசிடம் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டபோது, இந்தச் செலவுகள் பற்றிய விவரங்களைத் தரவும் அரசு தயாராக இல்லை.

இது தொடர்பாக, ‘எம்.ஜி.ஆர் பேரைச் சொல்லி ஏப்பம்?’ என்ற பெயரில் ஜூ.வி 21.02.2018 இதழில் கவர் ஸ்டோரி வெளியிட்டோம். கோவையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் லோகநாதன், தமிழக அரசின் பல துறைகளுக்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்த தகவல்களைக் கேட்டு மனு செய்தார். அந்த மனு பல துறைகளைச் சுற்றிவந்தது. கடைசி யில் மழுப்பலான பதில்களே தரப்பட்டன. ‘விகடன் ஆர்.டி.ஐ குழு’வின் மூலமும் தகவல்கள் கேட்டு தமிழக அரசின் செய்தி மக்கள்தொடர்புத் துறைக்கு மனு செய்தோம். அந்த மனுவையும் சுற்றவைத்து, நம்மைத் தலை சுற்றி விழ வைக்கலாம் என்று நினைத்தனர். அவர்களின் எண்ணம் ஈடேற வில்லை. சளைக்காமல் மீண்டும் மீண்டும் மனு செய்து, ஓரளவு தகவல்களைப் பெற்றோம். அந்தத் தகவல்களின் அடிப்படை யில் சில ஆய்வுகளிலும் இறங்கினோம்.

திண்டுக்கல்லில் 2017 டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக ஏழு கேள்விகளை திண்டுக்கல் கலெக்டருக்கு அனுப்பினோம். அதற்கு உரிய பதில் தராமல், 2017 ஜூன் 6-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின் நகலை மட்டுமே நமக்கு அனுப்பினர். அதில், ‘தமிழக அமைச்சரவைக் கூட்டம் 2017 மே 2-ம் தேதி நடந்தது. அதில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் (சென்னை, மதுரை நீங்கலாக) ரூ.7 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கும்படி, தமிழக அரசுக்குச் செய்தி மக்கள்தொடர்புத் துறை இயக்குநர் கோரிக்கை விடுத்தார். அதற்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம், ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு பணம் செலவிடவில்லை’ என்று நமக்கு பதில் கூறியுள்ளது. (நமக்கு அமைச்சர் அளித்த பதிலில் கலெக்டர்கள் செலவிட்டனர் என்று சொல்லியிருக் கிறார்.) பல மாவட்ட கலெக்டர்களும் இந்த அரசாணையையே பதிலாக நமக்கு அளித்திருந்தனர். இதர கேள்விகளை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து, ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்க ஒரு கோடியே மூன்று லட்சத்து 57 ஆயிரத்து 968 ரூபாய் செல விடப்பட்டது’ என்று தகவல் தந்தனர். இதே தொகை, பிற மாவட்டங்களிலும் செலவழிக்கப்பட்டிருக்கக் கூடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick