என்ன செய்தார் எம்.பி? -ஜெயவர்தன் (தென் சென்னை)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அப்புறப்படுத்தப்படும் குடிசை மக்களும் அவதிப்படும் ரயில் பயணிகளும்!

#EnnaSeitharMP
#MyMPsScore

டந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, மோடி அலையில் இந்தியா மூழ்கியிருந்தது; தமிழகத்தில் மட்டும் ‘மோடியா... லேடியா...’ என்ற போட்டியே பிரதானமாக இருந்தது. அ.தி.மு.க-வின் வேட்பாளர் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மருத்துவப் படிப்பை முழுமையாக முடிக்காத மாணவராக ஜெயலலிதாவைச் சந்தித்தார் ஜெயவர்தன். அமைச்சர் ஜெயக்குமாரின் மகன். அ.தி.மு.க மருத்துவர் அணியில் இருந்த ஜெயவர்தனுக்கு அப்போது வயது 27 மட்டுமே. “தேர்தலில் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்” என ஜெயலலிதாவிடம் கேட்டார். ‘‘படிப்பைக்கூட இன்னும் முடிக்கவில்லையே... இப்போதே அரசியலுக்கு வரவேண்டுமா?” என்று கேட்டார் ஜெயலலிதா. “டாக்டர் படிப்பை முடித்துவிட்டு மக்களுக்குத்தான் சேவைதான் செய்யப்போகிறேன்; அரசியலுக்கு வந்தாலும் அதைத்தான் செய்யப்போகிறேன். படிப்பு பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறேன்” என நம்பிக்கையாகச் சொன்னார். சில நாட்கள் கழித்து வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டபோது, தென் சென்னை தொகுதிக்கு நேரே ஜெயவர்தன் பெயர் இடம்பெற்றிருந்தது. அவர், ஜெயிக்கவும் செய்தார். அண்ணா, முரசொலி மாறன், டி.ஆர்.பாலு என தி.மு.க-வின் ஜாம்பவான்கள் கோலோச்சிய தொகுதியில் எம்.பி ஆகி நாலரை ஆண்டுகளைக் கடந்துவிட்டார் ஜெயவர்தன். தென் சென்னை மக்களுக்கு அவர் என்ன செய்திருக்கிறார்? களம் புகுந்தது ஜூ.வி.

தி.நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கும் தென் சென்னையின் தேவைகளும் கட்டமைப்பும் மக்களின் வாழ்க்கைத் தரமும் முற்றிலும் வேறுபட்டவை. தலைநகரில் இருப்பதால், மாநில அரசின் நேரடிக் கண்காணிப்பும் உண்டு. “ஜெயவர்தன் எதுவும் செய்யவில்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்ல முடியாது.  எம்.பி தொகுதி நிதியைச் செலவு செய்துள்ளார். ஆனால், புதிய திட்டங்கள், கட்டமைப்பு வசதிகளைப் பெரிய அளவில் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. குடிசைப்பகுதி மக்களை அப்புறப்படுத்தும் பிரச்னை இங்கு பிரதானமாக உள்ளது. புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களை, நகருக்கு வெளியே கொண்டுபோய் குடியமர்த்துவது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவுதான். அதைத் தடுத்து, ஆண்டாண்டு காலமாக இங்கு வாழும் மக்களை இங்கேயே குடியமர்த்துவதற்கு எம்.பி என்ற முறையில் ஜெயவர்தன் எதுவும் செய்யவில்லை. ஆற்றோரங்களை ஒட்டி 34 ஆயிரம் வீடுகள் தொகுதிக்குள் உள்ளன. இவர்களுக்கு மாற்று வீடு அமைத்துத் தர அருகிலேயே இடம் உள்ளது. அதைச் சுட்டிக்காட்டியும் பலனில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick