“வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்!”

‘இஸ்ரோ’ நம்பி நாராயணன்

‘‘நான் நிரபராதி என 1998 ஏப்ரல் 29-ம் தேதியே தீர்ப்பு சொல்லிவிட்டார்கள். அதற்குப் பிறகும், 20 ஆண்டுகள் நீதிக்காகப் போராடியிருக்கிறேன். நான் உட்பட ஆறு பேருடைய வாழ்க்கை சிதைக்கப்பட்டுத் தூக்கியெறியப்பட்டிருக்கிறது, இந்த அநியாயத்துக்கு யார் பொறுப்பு? அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். போலீஸாரைத் தூண்டும் அதிகாரிகள் தப்பிவிடுவது வழக்கம். ‘இனி அந்த நிலை மாறும். அதிகாரிகளுக்கும் தண்டனை கிடைக்கும்’ என இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சதி எப்படி நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், ‘ஏன் நடந்தது’ என்று யாருக்குமே தெரியாது. அதை இந்த கமிட்டி கண்டுபிடிக்கும். எல்லோரையும் போலவே அதை அறிய நானும் ஆவலாக இருக்கிறேன்’’ என்று சொல்லும் நம்பி நாராயணனின் கண்களில் தெரிகிறது நிம்மதி.

இந்தியாவின் கிரயோஜெனிக் ராக்கெட் இன்ஜின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைதானவர் நம்பி நாராயணன். இதுகுறித்த வரைபடங்களை வைத்திருந்ததாக மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா மற்றும் அவரின் தோழி ஃபாசூயா ஹசன் ஆகியோர் 1994-ம் ஆண்டு கேரள போலீஸால் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து இஸ்‌ரோ அமைப்பின் கிரயோஜெனிக் சிஸ்டம் திட்ட இயக்குநராக இருந்த நம்பி நாராயணன், இஸ்‌ரோ இணை இயக்குநர் சசிகுமாரன், ரஷ்யா விண்வெளி அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், தொழிலதிபர் எஸ்.கே.சர்மா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ விசாரணைக்குப் பிறகு அனைவரும் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு, அன்றைய கேரள முதல்வர் கருணாகரனின் பதவியைப் பறிக்கும் அளவுக்குப் பூகம்பத்தை ஏற்படுத்தியது. ‘இந்த வழக்கின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும். எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்’ என நம்பி நாராயணன் தனி ஒருவராகச் சட்டப் போராட்டம் நடத்தினார். அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கிற்கு மூலகாரணம் என்ன என்பது குறித்து விசாரிக்கத் தனி கமிட்டி அமைத்துள்ளது. கைது செய்யப்பட்டபோது தனக்கு நடந்த சித்ரவதைகள், குடும்பத்துக்கு ஏற்பட்ட அவமானங்கள், வலிகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருக்கும் நம்பி நாராயணனிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick