என்ன செய்தார் எம்.பி? - மருதராஜா (பெரம்பலூர்)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை! - ஆளும்கட்சி எம்.பி-யின் புலம்பல்

#EnnaSeitharMP
#MyMPsScore

2009 நாடாளுமன்றத் தேர்தல். அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது பெரம்பலூர் தொகுதிக்கான சிபாரிசு பக்கத்தில் மருதராஜா பெயர் இருந்தது. மகிழ்ச்சியோடு நிர்வாகிகள் பலரைப் பார்த்து ஒத்துழைப்புக் கேட்டு, பிரசாரப் பயணத்துக்கும் பிளான் போட்டார் மருதராஜா. அந்த மகிழ்ச்சி சில நாட்கள்கூட நீடிக்கவில்லை. மருதராஜா மாற்றப்பட்டு, கே.கே.பாலசுப்பிரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். விரக்தியில் முடங்கிப்போன மருதராஜாவுக்கு, 2014 தேர்தலில் சான்ஸ் கிடைத்தது. மீண்டும் சீட் வாங்க மருதராஜா காட்டிய முயற்சியை, தன்னை வெற்றி பெறவைத்த பெரம்பலூர் தொகுதிக்குக் காட்டினாரா? ‘‘நான் மட்டும் முயற்சி எடுத்து என்ன செய்வது? என் முயற்சிக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லையே’’ என்று புலம்புகிறார் மருதராஜா.

கிளைச் செயலாளராகத் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர் மருதராஜா. பெரம்பலூர், திருச்சி, கரூர் என மூன்று மாவட்டங்களில் பரந்து விரிந்திருக்கிறது பெரம்பலூர் தொகுதி. ‘‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சியில் பெரம்பலூர் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதற்காக, விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், 10 ஆண்டுகளைத் தாண்டியும் அது வரவில்லை. கையகப்படுத்தப்பட்ட நிலங்களை எங்களுக்குத் திருப்பி அளிக்கவுமில்லை’’ எனப் புலம்புகிறார்கள் விவசாயிகள்.

“பெரம்பலூர் தொகுதியின் எம்.பி-யாக இருந்தும் பெரம்பலூர் மாவட்டத்துக்குள் அவர் அலுவலகமே வைக்கவில்லை. திருச்சியில் இருக்கிற அவரின் அலுவலகத்துக்குப் போகச் சிரமமாக இருக்கிறது. தொகுதியில் பெரிய அளவில் எந்த வளர்ச்சிப் பணியையும் எம்.பி செய்யவில்லை. பெரம்பலூர் பகுதியில் விளையும் சின்ன வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. அதைப் பதப்படுத்தி வைக்கக் குளிர்பதனக் கிடங்கு வேண்டும் எனப் பல வருடங்களாகக் கேட்டு வருகிறோம். இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டா லும், அதன் முழுப்பலன் இன்னும் பெரம்பலூர் பகுதிக்குக் கிடைக்கவில்லை. அவர் எம்.பி-யான பிறகு பிரமாண்ட வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். இதுதான் அவர் தொகுதிக்குச் செய்தது” என்கிறார் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அருள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick