“20 ஆயிரம் குடும்பங்களை அழிக்க நிலக்கரி இறங்கு தளம் வருகிறது!”

மீண்டும் போராட்டத்தில் தூத்துக்குடி மீனவர்கள்

‘‘உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்துக்காக, கடலுக்குள் 8 கி.மீ தூரத்துக்குப் பாலம் கட்டி இறங்கு தளம் அமைக்கப்படுவதால் பல சீரழிவுகள் ஏற்படும். இதற்காக அமைக்கப்படும் தூண்களால், பவளப்பாறைகள் அழியும். சரக்குக் கப்பல்களின் வருகையால் படகுகள் சேதமாகும், வலைகளும் அறுபடும். கடலில் கலக்கும் நிலக்கரித் துகள்களால் கடல் மாசுபடும், மீன்வளமும் அழியும். கடல் தொழிலை நம்பி 3,000 நாட்டுப் படகுகள் இயக்கப்படுகின்றன. இவற்றைச் சார்ந்து 20 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்” என்று கவலையுடன் சொல்கிறார், கல்லாமொழி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் பயஸ்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.8,694 கோடி மதிப்பீட்டில் 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு மின் நிலையங்களை அமைக்க, 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்றன. மத்திய அரசின் உதவியுடன் அந்தப் பணிகள் நடை பெற்றன. பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 2013-ம் ஆண்டு இத்திட்டத்தை மாற்றி, மத்திய அரசின் உதவியில்லாமல் தமிழ்நாடு மின்சார வாரியமே இதைத் தனித்துச் செயல்படுத்தும் என அறிவித்தார். இதற்காக விடப்பட்ட டெண்டரில் பெல் நிறுவனமும், இந்தோ-சீனா கான்சார்டியம் நிறுவனமும் விண்ணப்பித்தன. ஒரு மெகாவாட் உற்பத்தி செய்ய ரூ.7.376 கோடி செலவாகும் என்று சீன நிறுவனமும், ரூ.7.480 கோடி செலவாகும் என்று பெல் நிறுவனமும் குறிப்பிட்டிருந்தன. பெல் நிறுவனம் இதற்கான தொகையில் 75 சதவிகிதத்தையும், சீன நிறுவனம் 85 சதவிகிதத்தையும் கடனாகத் தர முன்வந்தன. பல நிலைகளில் பெல் நிறுவனத்தைவிட சீன நிறுவனத்தின் விலைப்புள்ளி குறைவாகவே இருந்தது. ஆனால், குறைபாடுகள் இருப்பதாகக்கூறி, இரண்டு டெண்டர்களுமே ரத்து செய்யப்பட்டன. டெண்டர் தொடர்பாக சீன நிறுவனத்துடன் அப்போதைய மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார். ‘‘பேரம் படியாததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. திட்டத்தை உரிய நேரத்தில் செயல்படுத்தியிருந்தால், அதனால் கிடைக்கும் மின்சாரத்தின் மூலம் மின் வாரியம் பல கோடி ரூபாய் இழப்பைத் தவிர்த்திருக்க முடியும்’’ என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick